திண்டுக்கல்லை "சாய்த்த" மொய் விருந்து.. அந்த இலைக்கு அடியில்? பிரியாணி கடையில் ஒரே நெகிழ்ச்சி.. ஏன்?
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த மொய் விருந்து ஒன்று, ஒட்டுமொத்த மக்களிடையே நெகிழ்ச்சியை தந்து வருகிறது.. இந்த மொய் விருந்தை நடத்தியது யார் தெரியுமா?
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, அம்மாநிலத்தையே நிலைகுலைய வைத்துவிட்டது.. இந்த பேரிடரில் நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாக உயிரிழந்துள்ளனர்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகள், உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள்.

வாழ்வாதாரம்: இவர்களின் வாழ்வாதாரமே இன்று கேள்விக்குறியாகியிருக்கிறது.. மிகப்பெரிய ஆபத்திலிருந்து இவர்கள் உயிர்பிழைத்திருக்கிறார்கள்.... எனவே, இவர்களின் வாழ்வாதாரத்தை காக்க பல்வேறு உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.. இளகிய மனம் படைத்தவர்கள், நாட்டின் நாலாபுறமிருந்தும் உதவிகளை வயநாட்டில் செய்து வருகிறார்கள்.
பக்கத்து மாநிலமான கேரளாவுக்கு தமிழகம் தொடர்ந்து உதவிக் கொண்டு வருகிறது.. அரசியல் பிரமுகர்கள் முதல் தனிநபர்கள் வரை வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில்தான், திண்டுக்கல்லில் மொய் விருந்து நடத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல் ஹோட்டல் சங்கத்தினர் இந்த மொய் விருந்தை நடத்தி, அதிலிருந்து நிதி திரட்டியுள்ளனர். திண்டுக்கல்லில் முஜிப் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த பிரியாணி கடையின் ஓனர் பெயர் முஜிபுர் ரகுமான்..
இவர் வயநாடு மக்களுக்கு உதவும் நோக்கில் ஹோட்டல் அசோசியேஷன், ரோட்டரி சங்கத்துடன் இணைந்து "சுய விருந்து" என்ற மொய்விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.. திண்டுக்கல் ரவுண்ட்ரோட்டில் உள்ள முஜிபுர் ரகுமான் உணவகத்தில் இந்த மொய் விருந்து தயாரானது.. அதாவது. மொய் விருந்து என்றால் சாப்பிடும் சாப்பாட்டுக்கு பில் எதுவும் வழங்கப்படாது.. மாறாக தாங்கள் விரும்பிய தொகையை அவர்கள் வழங்கலாம்.
பிரியாணி கடை: பிரியாணி கடைக்காரர் இப்படி மொய் விருந்து நடத்துவதாக, ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவிலும் பரவியது.. இதையடுதது, ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர்.
இரவு 8:00 மணிக்கு தொடங்கிய விருந்து இரவு 11:00 மணி வரை நடந்தது. முதல் கட்டமாக 700 பேருக்கு பிரியாணி, இனிப்பு, சிக்கன் 65, முட்டை, தோசை, இட்லி என 10 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டது. ஆயிரம் பேருக்கு மேல் விருந்தில் பங்கேற்றனர். கூட்டத்தை கருதி மேலும் 300 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
மொய் விருந்தில் பலரும் சாப்பிட்டுவிட்டு, சாப்பாட்டுக்கு உண்டான தொகையை விட, அதிக தொகையை இலைக்கு அடியில் வைத்துவிட்டு சென்றார்கள்.. பெரும்பாலானோர் இலையின் கீழ் ரூ.500 முதல் ரூ.2500 வரை மொய் வைத்தனர்.
ஒருசிலர் பணமாக தராமல், "செக்" ஆகவே வைத்துவிட்டு சென்றிருந்தனர்.. அதேபோல, தங்களிடம் குறைவான பணத்தை வைத்திருந்தவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் செலுத்திவிட்டு போனார்கள்..
சிறுவர்கள்: இந்த விருந்தில் சிறுவர்களும் பங்கேற்றனர்.. அவர்கள் விருந்துக்கு வரும்போதே, தாங்கள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தையும் கையோடு கொண்டு வந்திருந்தனர்.. வயநாடு மக்களுக்காக தங்கள் உண்டியல் காசை தருகிறோம் என்றார்கள். இதில் மொத்தமாக மொய் விருந்து மூலம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் கிடைத்தது.
இந்த மொய் விருந்து குறித்து முஜிபுர் ரகுமான் சொல்லும்போது, "இயற்கையின் சீற்றத்திலுருந்து யாருமே தப்ப முடியாது. வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முஜிப் பிரியாணி, ஹோட்டல் அசோசொயேஷன், ரோட்டரி சங்கம் இணைந்து மொய் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வயநாடு மக்களுக்கு நான் ரூ.50 ஆயிரமோ, ஒரு லட்சமோ தனியாக நிவாரணமாக தந்து உதவலாம்.
முன்னோர்கள்: ஆனால் திண்டுக்கல் மக்களுடன் இணைந்து பங்களிப்பை செய்யவேண்டும் என்ற நோக்கில் தான், நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய, இப்போது மக்களால் மறந்துபோன "மொய் விருந்து"க்கு ஏற்பாடு செய்தேன். இதில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். மொய்விருந்தில் வந்த தொகை அனைத்தும் வயநாடு மக்களுக்கு நிவாரணத்தொகையாக சென்றடையும்" என்றார்.
கஜா புயல்: தொடர்ந்து அவர் சொல்லும்போது, "நான் ஆதரவற்ற 50 பேருக்கு தினமும் உணவு வழங்கி வருகிறேன். கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து உதவிகளை செய்தேன்.. கொரோனா காலத்திலும் களத்தில் இறங்கி உதவிகளை செய்தேன். வயநாட்டு சம்பவம் என்னை மிகவும் உலுக்கிவிட்டது.
ஆனால், நான் உதவினால் மட்டும் போதாதது.. என்னை சுற்றியிருப்பவர்களை உதவ செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் மொய் விருந்து நடத்தினேன். மொய் விருந்து குறித்து அறிவிப்பை வெளியிட்ட, 3 மணி நேரத்தில், ஆயிரம் பேர் கலந்து கொண்டு சாப்பிட்டனர். மொத்த தொகையை அடுத்த வாரம் கேரள அரசிடம் வழங்க உள்ளேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
