கொடைக்கானல் கூனிப்பட்டி ‘நிலப் பிளவு’க்கு என்ன காரணம்? புவியியல் ஆய்வு மையம் முதற்கட்ட ஆய்வறிக்கை!
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே கூனிப்பட்டி வனப்பகுதியில் ஏற்பட்ட நிலப் பிளவு தொடர்பாக இந்திய புவியியல் ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வின் முதற்கட்ட ஆய்வறிக்கை வெளியானது. தண்ணீர் அதிகளவில் பூமிக்குள் உட்புகுந்ததால் பிளவு ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலப் பிளவு பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் கடைசி கிராமமாக கிளாவரை உள்ளது. இந்த கிராமத்தின் ஒரு பகுதியான கீழ் கிளாவரைப் பகுதிக்கு செருப்பனூத்து ஓடையில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். சில நாட்களாக தண்ணீர் வராததால் குழப்பம் அடைந்த மக்கள் செருப்பனூத்து ஓடை பகுதிக்கு செல்லும் வழியில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என பார்க்கச் சென்றனர்.

அப்போது கீழ் கிளாவரை பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக செல்லும் வழியில் கூனிப்பட்டி வனப்பகுதியில் 300 அடி தூரத்துக்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியான சமயத்தில் இந்த நிலப்பிளவு ஏற்பட்டதால், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது.
நிலப் பிளவுக்கு நில அதிர்வு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் நில பிளவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராஜலிங்கம், "கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது வரை நில அதிர்வு பதிவுகள் ஏதும் பதிவாகவில்லை" எனத் தெரிவித்தார்.
எனினும் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் கூனிப்பட்டி வனப்பகுதியில் திடீர் நிலப் பிளவுகள் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம், பழனி எம்.எல்.ஏ செந்தில்குமார், வட்டாட்சியர் கார்த்திகேயன், புவியியல் மற்றும் வனத்துறையினர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்ய மண் மாதிரிகளை புவியியல் துறையினர் சேகரித்தனர்.
இந்நிலையில், கொடைக்கானலில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள கூனிப்பட்டி வனப்பகுதியில் ஏற்பட்ட நிலப் பிளவு தொடர்பாக இந்திய புவியியல் ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வின் முதற்கட்ட பிரத்யேக ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. கூனிப்பட்டி அருகே நீர்நிலையில் இருந்து தண்ணீர் அதிகளவில் பூமிக்குள் உட்புகுந்ததால் பிளவு ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலப் பிளவு பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தற்காலிக நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications