கொடைக்கானல் டூர் போகும் மக்கள் இதை கவனிங்க.. கூல்டிரிங்ஸ் பாட்டில் கொண்டு வந்தால் ரூ.20 பசுமை வரி!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு 5 லிட்டருக்கு குறைவாக உள்ள தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அனைத்து வகையான குளிர்பானம் கொண்டு வந்தால் பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 வீதம் பசுமை வரி விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கொடைக்கானலில் நிலவும் இதமான, குளுமையான கால நிலையை அனுபவிக்கவும், மலைப்பகுதிகளில் உள்ள குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறை, மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி, மன்னவனூர் ஏரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்களின் இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

மலைப்பகுதி சுற்றுலா தலங்களில் இயற்கை வளங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகளின் வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இ-பாஸ் பதிவு செய்த பிறகே கொடைக்கானலுக்கு தனி வாகனங்களில் வருகை தர முடியும். இந்நிலையில், குளிர்பான பாட்டில் வைத்திருந்தால் பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 வீதம் பசுமை வரி விதிக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபடி திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் 'epass.tnega.org" என்கிற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ.பாஸ் பெற்றுப் பயணிக்கும் முறை கடந்த 07.05.2024 முதல் நடைமுறையில் உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கொடைக்கானல் பகுதியில் இருக்கும் இயற்கை வளங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் வகையிலும், சுற்றுலா பயணிகளின் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் வார நாட்களில் 4000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்கள் கொடைக்கானலுக்கு E-Pass பெற்று அனுமதிக்கும் நடைமுறை மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் அரசு பேருந்துகள், உள்ளூர் வாகனங்கள், விவசாய பொருட்கள் மற்றும் சரக்கு பொருள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறுவதற்கு ஏற்கனவே விலக்களிக்கப்பட்டு உள்ளது. அதே போல் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், 5 லிட்டருக்கு குறைவாக உள்ள தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அனைத்து வகையான குளிர்பான பாட்டில்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 5 லிட்டருக்கும் குறைவாக உள்ள தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அனைத்து வகையான குளிர்பான பாட்டில் வைத்திருந்தால் பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 வீதம் பசுமை வரி விதிக்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications