டிவி சீரியல் நடிகர் மீது ஒய்வு பெற்ற ராணுவ வீரர் துப்பாக்கி சூடு..திண்டுக்கல்லில் அதிர்ச்சி
நிலத்தகராறு காரணமாக சின்னத்திரை நடிகர் உள்பட 2 பேரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்:நிலத்தகராறில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் சின்னத்திரை நடிகர் உள்பட இருவர் மீது துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரின் பெயர் கருப்பையா, வயது 50, இவர் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரை நடிகர். வாணி, ராணி சீரியலில் நடித்துள்ளார். இவருக்கு திண்டுக்கல் அருகே சிறுமலை அகஸ்தியர்புரத்தில் சொந்தமான நிலம் உள்ளது.அந்த நிலத்தில் கருப்பையா விவசாயம் செய்து வருகிறார். சிறுமலை அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு,52. இவர் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். இவர் கருப்பையாவுக்கு நண்பர் ஆவார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் தனபால். இவருக்கு வயது 50. இவர் விவசாயியாக உள்ளார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரும் சிறுமலை அகஸ்தியர்புரத்தில் நிலம் வாங்கி அங்கு விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனபாலிடம் கருப்பையா 5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினாராம். இந்த நிலத்தை அளவீடு செய்த போது நான்கரை ஏக்கர் மட்டுமே இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கருப்பையா, ராஜாக்கண்ணு ஆகியோர் தனபாலிடம் அரை ஏக்கர் நிலத்துக்கான பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அகஸ்தியர்புரத்தில் உள்ள தனது வீட்டில் தனபால் இருந்தார்.
அப்போது கருப்பையாவும் ராஜாக்கண்ணுவும் தனபால் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் மூவரும் அரை ஏக்கர் நிலம் குறித்து பேசி வந்தனர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. மீண்டும் மீண்டும் அரை ஏக்கருக்கான பணத்தை கருப்பையா கேட்டதால் ஆத்திரம் அடைந்த தனபால் வீட்டிற்குள் சென்று துப்பாக்கியால் கருப்பையா மீது சுட்டார். அவர் சுடும்போது ராஜாகண்ணு இடையில் புகுந்து தடுக்க முயற்சி செய்தார் இதில் அவருக்கும் கையில் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மலைப்பகுதியில் இருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தற்போது புதிதாக துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications