ஆங்கிலேயரை அலறவிட்ட விருப்பாச்சி கோபால் நாயக்கர்- தூக்கிலிடப்பட்ட திண்டுக்கல் நினைவிடத்தின் கதி!
திண்டுக்கல்: ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய மண்ணில் 1857-ல்தான் முதல் சுதந்திரப் போர் நிகழ்ந்ததாக வரலாற்றுப் புத்தகங்கள் பேசலாம்.. ஆனால் அதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிராக வீரம் செறிந்த யுத்தங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இத்தகைய வீரப் போர் புரிந்த மாவீரர்களில் ஒருவரான திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சி பாளையக்காரரான கோபால் நாயக்கர் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட திண்டுக்கல் நகரின் மையப் பகுதி 'வரலாற்று கல்வெட்டு' எதுவும் இல்லாமல் வாக்கிங் போகிற இடமாக மட்டுமே காட்சி தருவதுதான் எத்தனை கொடூரம்!
மதுரையை நாயக்கர்கள் ஆண்ட போது மொத்தம் 72 பாளையங்களாகப் பிரித்து ஆட்சி செய்தனர். இந்த பாளையங்களில் ஒன்றுதான் திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள விருப்பாச்சி பாளையம்.

வேலுநாச்சியார், ஊமைத்துரை, மருது பாண்டியர்கள்: விருப்பாச்சி பாளையக்காரர்களில் வரலாற்றில் இடம்பிடித்தவர் கோபால் நாயக்கர். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோரின் சம காலத்தவர். சிவகங்கை சீமையில் வேலுநாச்சியார் கணவர் ஆங்கிலேயருடான யுத்தத்தில் வீரமரணத்தைத் தழுவ, தமது தளபதிகள் மருது பாண்டியர்களுடன் தத்தளித்த அவருக்கு அடைக்கலம் தந்தவர் விருப்பாச்சி கோபால் நாயக்கர். இன்றைக்கு வீரமங்கை வேலுநாச்சியாரும் மாமன்னர்கள் மருது சகோதரர்களும் வரலாற்றில் அழியா வீரப் புகழ் பெற்றிருக்கின்றனர் என்றால் அதற்கு விருப்பாச்சி கோபால் நாயக்கரின் அரவணைப்பும் அடைக்கலமும்தான் ஆணிவேர்.
புரட்சிக் கூட்டணி அமைத்த கோபால் நாயக்கர்: வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட ஆங்கிலேயர்கள் அவரது தம்பி ஊமைத்துரையை சிறையில் அடைத்தனர். அந்த சிறையை உடைத்து ஊமைத்துரையை மீட்டு மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி மன்னராக்கியவரும் விருப்பாச்சி கோபால் நாயக்கர்தான். ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த அத்தனை பாளையக்காரர்களையும் ஓரணியில் திரட்டி கிபி 1799 கோவை காளிஹான், மலபார் கேரள வர்மா, கன்னட, மராட்டிய துண்டாஜிவாக் உள்ளிட்டோரை கொண்ட தீபகற்ப கூட்டணி என்ற முதலாவது புரட்சிக் கூட்டணி முலம் ஆகப் பெரும் யுத்தம் நடத்தியவர் கோபால் நாயக்கர்.

திண்டுக்கல்லில் தூக்கிலிடப்பட்ட கோபால் நாயக்கர்: கிபி 1800-ல் கோபால் நாயக்கரை அழித்தொழிப்பது என முடிவெடுத்து யுத்தத்தை நடத்தியது ஆங்கிலேயர் படை. விருப்பாச்சியில் கோபால் நாயக்கரின் கோட்டை கொத்தளங்கள், அரண்மனைகள் அத்தனையும் மண்ணோடு மண்ணாகிப் போகின. தப்பி ஓடி தலைமறைவான கோபால் நாயக்கர் காட்டிக் கொடுக்கப்பட்டதால் சிறை பிடிக்கப்பட்டார். கிபி 1801-ம் ஆண்டு மே 4-ந் தேதி கோபால் நாயக்கர் கைது செய்யப்பட்டு கொடூர சித்ரவதைகளுக்குள்ளாக்கப்பட்டார். அதே கிபி 1801-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி இன்றைய திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள குளத்தின் கரையில் இருந்த புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார் விருப்பாச்சி கோபால் நாயக்கர் எனும் மாவீரவன்.
விருப்பாச்சி கோபால நாயக்கர் தூக்கிலிடப்பட்ட திண்டுக்கல் நினைவிடத்தின் கதி pic.twitter.com/hvgXQMAb5Q
— மா.ச. மதிவாணன் (@masamathi) August 13, 2024
திண்டுக்கல் கோபால சமுத்திரம்: திண்டுக்கல் நகரில் கோபால் நாயக்கர் தூக்கிலிடப்பட்ட இடத்தின் இன்றைய பெயர் கோபால சமுத்திரம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் இந்த கோபால சமுத்திரம் எனும் குளம் உள்ளது. இந்த குளத்தின் நடுவே வெட்டப்பட்ட கிணறு ஒன்றும் இன்றும் உள்ளது. முன்பெல்லாம் ஆகாய தாமரைகள் மண்டிப் போய் கேட்பாரற்று சிதிலமடைந்த திண்டுக்கல் கோபால சமுத்திரம் அண்மையில்தான் "மழைநீர் சேகரிப்பு மையமாக" சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக புத்துயிர் ஊட்டப்பட்டது. இந்த கோபால சமுத்திரம் என்றென்றும் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் வரலாற்றை சொல்லிக் கொண்டுதான் இருக்கும்.

பெயருக்கு கூட 'விருப்பாசி கோபால் நாயக்கர் பெயர் இல்லையே: ஆனால் விருப்பாச்சி கோபால் நாயக்கர் தூக்கிலிடப்பட்ட இடம்தான் திண்டுக்கல் கோபால சமுத்திரம் என்பது இப்போதிருக்கும் தலைமுறைக்கும் இனிவரும் தலைமுறைக்கும் தெரிய வாய்ப்பே இல்லை. ஏனெனில் சீரமைக்கப்பட்ட கோபால சமுத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் "வரலாற்றுச் சிறப்புமிக்க" கோபால சமுத்திரம் என்று மட்டும்தான் உள்ளது. எதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்கதானது இந்த கோபால சமுத்திரம்? என்பது கூட இடம் பெறவில்லை. அவ்வளவு ஏன் இந்த நடைபயிற்சி பாதை முழுவதும் நாமும் சுற்றிப் பார்த்துவிட்டோம்.. தனியார் நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள்தான் இருக்கின்றனவே தவிர கிஞ்சித்தும் கூட ஒரு இடத்தில் கூட " விருப்பாச்சி கோபால் நாயக்கர்" என்ற பெயர் கூட "பெயரளவில் கூட" இல்லை. அப்படி இருக்கும் போது ஆங்கிலேயரிடம் மண்டியிடாத மாவீரன் வரலாறு மட்டுமே இங்கே இருக்கப் போகிறது? நமக்காக இன்னுயிர் ஈந்த மாவீரர்களை போற்றிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துச் செல்லும் லட்சணம் இதுதானா? என்பது பொதுமக்களின் குமுறல்.

கோபால் நாயக்கருக்கு சிலை அமைக்க வேண்டும்: இது தொடர்பாக திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கணேசனை நமது ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு மாமன்ற உறுப்பினர் கணேசன் நமக்கு அளித்த பதில்: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் நினைவுச் சின்னம் மற்றும் சிலைகளை அமைக்க வேண்டும். குறிப்பாக நாட்டு விடுதலைக்காகப் போராடிய இந்த தியாகிகளை ஜாதிய அடையாளங்களுக்குள் சிக்க வைப்பது, அடைத்து வைப்பதை கைவிட வேண்டும். திண்டுக்கல் மண்ணில் இருந்து நாட்டு விடுதலைக்காகப் போராடிய முதல் பாளையக்காரரான விருப்பாச்சி கோபால் நாயக்கருக்கும் பின்னாளில் வ.உ.சிதம்பரனாருடன் இணைந்து தேசவிடுதலைக்காக சிறை கொடுமைகளை தாங்கி துயருற்ற நிலையில் மரணித்த வத்தலகண்டு சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோருக்கு திண்டுக்கல் மாநகராட்சியில் சிலைகள் அமைக்க வேண்டும்.

இந்த இருவருக்குமான சிலைகளை விருப்பாச்சி கோபால் நாயக்கர் தூக்கிலிடப்பட்ட திண்டுக்கல் கோபால சமுத்திரக் கரையிலேயே அமைத்தால் ஒருசேர இருவரும் காலந்தோறும் நினைவு கூறப்படுவர். அதேபோல திண்டுக்கல் மலைக்கோட்டையும் இந்திய விடுதலைப் போரில் மகத்தான பங்களிப்பு செய்திருக்கிறது. திண்டுக்கல் மலைக்கோட்டையின் பங்களிப்பும் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். திண்டுக்கல் மலைக்கோட்டையின் கீழே உள்ள திருப்பூர் குமரன் பூங்காவில் கொடிகாத்த தியாகி திருப்பூர் குமரனுக்கும் சிலை அமைக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட சுவடுகள் கேட்பாரற்று கைவிடப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் ஒரு குழு அமைத்து மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் கண்டறிந்து சீரமைக்க வேண்டும் என்பதுதான் மக்களின் வேண்டுகோள். இவ்வாறு மாமன்ற உறுப்பினர் கணேசன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு தெரிவித்தார்.
திண்டுக்கல் நிர்வாகம் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா?
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications