கொடைக்கானலில் அமலாகிறது புது ரூல்ஸ்.. சுற்றுலா பேருந்தில் போறவங்க.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க
திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வரும் நிலையில், நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கொடைக்கானலில், 12 மீட்டருக்கும் நீளமான சுற்றுலா பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடை வரும் 18 ஆம்தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுவது கொடைக்கானல். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானலில் உள்ள மலைப்பகுதிகளில் இயற்கை ரம்மியமான சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் படையெடுப்பது வழக்கம். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால் கொடைக்கானலில் எப்போதும் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது.

மலைப்பாதையிலும் சரி.. கொடைக்கானல் நகருக்குள்ளும் சரி.. சிறிது நேரம் வாகன் நெரிசல் ஏற்பட்டாலும் கூட பல மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். இதனால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனால், நகரின் நுழைவுப் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள செக் போஸ்டில் வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறது. இ பாஸ் வைத்து இருக்கும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கும் அனுமதி கிடையாது. வாகன சோதனையின் காரணமாக அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இதனால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பது பற்றி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அடிவார பகுதிகளான காமக்காப்பட்டி, பழனி, அடுக்கம், சித்தரேவு, தர்மத்துப்பட்டி உள்ளிட்ட சோதனை சாவடிகளில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் இணைந்து சோதனையில் ஈடுபட வேண்டும்.
மேலும் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டது. அது மட்டும் இன்றி கொடைக்கானலில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள சுற்றுலா பேருந்துகளை இயக்க விதிக்கப்பட்ட தடை வருகிற 18 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாகவும் நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதிகாரிகள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையால், கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் குறைந்தால் சுற்றுலாப் பயணிகள் சிரமம் இன்றி கொடைக்கானல் சென்று வர முடியும் என்பதால், நேரமும் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடைக்கானலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை முதல் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு சென்றால் அபராதம் விதிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 லிட்டர் கொள்ளளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்கள் வைத்து இருந்தால் உடனடியாக ரூ.20 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications