பழனியில் கோலாகலம்! இன்று 2வது நாளாக முத்தமிழ் முருகன் மாநாடு! பிரமாண்ட ஏற்பாடு.. குவிந்த பக்தர்கள்!
திண்டுக்கல்: பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று தொடங்கிய முருகன் மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' பழனியில் நேற்று தொடங்கியது. பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நேற்று காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், நாதஸ்வரம் தவில் மங்கள இசையுடன் மாநாடு தொடங்கியது. காலை 8.55 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகனடி சுவாமிகள் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி மாநாட்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், பழனி எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் வேல் கோட்டத்தை தொடங்கி வைத்தனர். காலை 9.30 மணிக்கு சீர்காழி கோ.சிவசிதம்பரத்தின் இறைவணக்கத்துடன் மாநாடு தொடங்கியது.
காணொளிக் காட்சி வாயிலாக கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் குறித்து பட்டியலிட்டார். குறிப்பாக நிலம் மீட்பு, புனரமைப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கோள் காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெற வேண்டும் என்று கூறினார். மேலும், கோயில் கருவறைக்குள் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும் என்றும் தெரிவித்தார். அனைத்து துறைகளிலும் சமமான வளர்ச்சி இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, மாநாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. இன்று இரண்டாவது நாளாக அனைத்துலக முருகன் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள், பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் முருகனின் சிறப்புகள் குறித்த கண்காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள், முருக பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டுள்ளனர். இங்கிலாந்து, இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், முருகனின் சிறப்பை உலகறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் முருகன் வழிபாட்டு சிறப்புகள், இலக்கிய சிறப்புகள் குறித்து மாநாட்டில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
குன்று போல் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் முன்பு ஏராளமான பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மாநாட்டிற்கு வரும் அனைத்து பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பிரசாத பைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு லட்சம் பேருக்கு 200 கிராம் அளவிலான பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி, லேமினேசன் செய்யப்பட்ட முருகன் படம் வழங்கப்படுகிறது.
மாநாட்டுக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், ஆதீனங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு நேற்றும் இன்றும் மூன்று நேரமும் இலவச உணவு வழங்க இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக பிரத்யேகமாக எட்டு இடங்களில் உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டு, 500க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பிரமாண்டமாக உணவு சமைத்து வருகின்றனர். வெளிநாட்டவர்களுக்குத் தேவையான உணவு வகைகள், உள்நாட்டு பிரமுகர்களுக்குத் தேவையான உணவு வகைகள் என பல்வேறு விதங்களில் பல்வேறு வகைகள் உணவுகளை தயார் செய்யும் பணியில் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பக்தர்களுக்கு காலை உணவாக ஷாஹி துக்டா, இளநீர் இட்லி, தஞ்சாவூர் மிளகு முந்திரி பொங்கல், நெய், பொடி ரோஸ்ட், பன்னீர் பூஜ்ஜியா, மோதி பூரி என காலை உணவாகவும், இரவு உணவாக ஹாட் பாம்பே ஜாங்கிரி, பனைவெல்லம் மைசூர்பா, வெஜ் மஞ்சூரியன், மினி ஆனியன் சமோசா, தக்காளி சாஸ், காஞ்சிபுரம் இட்லி, கருவேப்பிலை குழம்பு, மைசூர் மசாலா தோசை, வெஜ் ஆம்லெட், உடுப்பி கி சாம்பார், செட்டிநாடு கார சட்னி, ஆம்பூர் வெஜ் மட்டம் தம் பிரியாணி, மஸ்ரூம் பள்ளி பாளையம் கிரேவி, சாமை அரிசி தயிர் சாதம் ஆகியவையும், மதிய உணவாக சாதம், சம்பார், ரசம், புளிக்குழம்பு, தயிர், அப்பளம், உருளைக்கிழங்கு கூட்டு, வடை, வெண்டைக்காய் பொரியல், முட்டைக்கோஸ் பொரியல், ஊறுகாய், பருத்திப்பால் அல்வா, பாயாசம், தண்ணீர் பாட்டில் என பல்வேறு வகை உணவுகள் மக்கள் ஆங்காங்கே அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பழனியைச் சுற்றி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 1 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் பங்கேற்ற நிலையில் இன்று இரண்டாவது நாள் மாநாடு நடைபெறுகிறது. இன்றுடன் இந்த மாநாடு நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications