வெங்காயம் விலையை கேட்டாலே கண்ணீர் வருதே! ராக்கெட் வேகத்தில் உயரும் விற்பனை விலை! இல்லத்தரசிகள் ஷாக்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தீபாவளிக்கு முன்பு வரை 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் விலை தற்போது 80 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரே வாரத்தில் 40 ரூபாய்க்கு மேலாக வெங்காயத்தின் விலை உயர்ந்திருப்பதும், வரும் காலங்களில் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென் மாவட்டங்களிலேயே வெங்காயத்திற்கென தனி சந்தை இரு இடங்களில் பிரம்மாண்டமாக உள்ளது. திண்டுக்கல் வெங்காயத்திற்கு என்று தனி சந்தையானது திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் நடைபெறும்.

இந்தச் சந்தைக்கு திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், தேனி, கம்பம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் வெள்ளாமை ஆகக்கூடிய வெங்காயங்களை இந்தச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
இங்கு வரக்கூடிய வெங்காயங்களை சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் வியாபாரிகள் விற்பனைக்கு வாங்கி செல்வர். சென்ற மாதம் 350 டன் சின்ன வெங்காயங்கள் வரக்கூடிய இடத்தில் வரத்து அதிகரித்து நாள் ஒன்றுக்கு 500 டன் சின்ன வெங்காயங்கள் வருகை தந்ததால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையானது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு இங்கிருந்து பல பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. மார்க்கெட் செயல்படும் 3 நாட்களில் ஒரு நாளைக்கு 25 லாரிகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெங்காயம் வந்திறங்கும். தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக வெங்காயம் பட்டறைகளில் இருப்பு வைக்க முடியவில்லை.
பயிரிடப்பட்ட வெங்காயமும் மழையால் சேதத்திற்குள்ளாகிவிட்டன. இதனால் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயங்கள் அனைத்தும் தற்போது விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. வழக்கமாக ஒரு நாளைக்கு (திங்கள், புதன், வெள்ளி தினங்களில்) 25 லாரிகள் வெங்காயம் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு வந்து இறங்கியது. தற்போது 15 லாரிகளாக குறைந்துவிட்டது. ஆனால் தேவை எப்போதும்போல் குறையாமல் உள்ள நிலையில் வரத்து குறைவால் வெங்காயம் விலை அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த வாரம் வரை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை சின்ன வெங்காயம் விற்பனையானது. தற்போது தீபாவளி பண்டிகை முடிவடைந்திருக்கும் நிலையில் வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு வார இடைவெளிக்குள் 40 ரூபாய் வரை வெங்காயத்தின் விலை உயர்ந்து இருப்பதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் சில்லரை விற்பனை விலையில் 100 ரூபாய் வரை வெங்காயம் விற்பனையாவதால் பட்ஜெட்டில் துண்டு விழும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பெரிய வெங்காயம் தற்போதைய சூழலில் நூறு ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 80 முதல் 90 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் வெங்காயத்தின் விலை அதிகரித்து இருக்கிறது. அங்கு சில்லரை விற்பனை கடைகளில் 100 முதல் 110 ரூபாய் வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். தீபாவளிக்கு பிறகு விலை குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது அதிகரித்து வருவது நடுத்தர மக்களை கவலை கொள்ள செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பூண்டு, பீன்ஸ் கேரட் உள்ளிட்டவற்றின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications