பழனி முருகன் மாநாடு: சுமார் 2 லட்சம் பேருக்கு பிரம்மாண்ட அறுசுவை விருந்து.. சமைக்க மட்டும் 700 பேர்
திண்டுக்கல்: பழனியில் தமிழக இந்து சமய அறநியைத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் 2 லட்சம் பேருக்கு மூன்று வேளையும் அறுசுவை உணவு அளிக்கப்படுகிறது. 3 வேளையும் பக்தர்களுக்கு உணவு சமைக்கும் பணியில் 700 பேர் ஈடுபட்டுள்ளனர். லட்டு பூரி, இட்லி, பொங்கல், தோசை, சாதம் என பல வகை உணவுகள் பரிமாறப்படுகிறது.
தமிழக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' பழனியில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி உள்ளது. பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரியில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், நாதஸ்வரம்-தவில் மங்கள இசையுடன் மாநாடு தொடங்கியது. காலை 8.55 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகனடி சுவாமிகள் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார். உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி இதில் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வேல் கோட்டத்தை தொடங்கி வைத்தனர். காலை 9.30 மணிக்கு சீர்காழி கோ.சிவசிதம்பரத்தின் இறைவணக்கத்துடன் மாநாடு தொடங்கியது.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மாநாட்டில் தொடக்கவுரை ஆற்றினார். தருமபுரம் ஆதீனம் தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை நிகழ்த்தினார்கள்.
மாநாட்டு விழா மலர், ஆய்வு மலர் ஆகியவை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், பி.புகழேந்தி, வி.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர். காலை 11 மணி முதல் 11.45 மணி வரை 'உலகளாவிய உயர்வேலன்' என்ற தலைப்பில் மலேசியா தொழில்முனைவோர்-கூட்டுறவு துறை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான், இங்கிலாந்து நாட்டின் இப்ஸ்விச் மேயர் இளங்கோ கே.இளவழகன், மலேசியா சிலாங்கூர் மாநில செயற்குழு உறுப்பினர் டி.எச்.பாப்பாராய்டு வேரமன், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஆறுமுகம் செந்தில்நாதன், ஆஸ்திரேலியாவை சேர்ந்த சந்திரிகா சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
காலை 11.45 மணியில் இருந்து 1 மணி வரை ஆன்மிக பேச்சாளர் சுகிசிவத்தின் 'முருகன் புகழ் வளர்க்கும் முத்தமிழில், முந்து தமிழ்' இயலா, இசையா, நாடகமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பட்டிமன்றம் முடிந்ததும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. இந்த மாநாட்டில் பல ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். பக்தர்கள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் மற்றும் விஐபிக்கள் என பலரும் மதிய விருந்தில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வடை, பாயாசத்துடன் அறுசுவை உணவு அளிக்கப்பட்டது.
பழனியில் 2 லட்சம் பேருக்கு உணவு அளிக்கும் வகையில் பிரம்மாண்டமான உணவு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு உணவுகளை சமைப்பதற்கு என்றே பிரத்யேகமாக சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தோசை தொடங்கி, பொங்கல், வடை, இட்லி, லட்டு, வாழைப்பழம், சாப்பாடு என பல்வேறு வகையான உணவுகள் மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி உணவு தயாரித்தும் வழங்கும் குழுவினர் கூறுகையில், மொத்தம் ஒன்றரை முதல் 2 லட்சம் பேருக்கு உணவு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கூறியிருக்கிறார்கள். இங்கு வழங்கப்படும் உணவு எதுவும் நார்மலானது இல்லை.. எல்லாமே அறுசுவை உணவாகும். சாம்பார் சாதம், தயிர்சாதம் என்று இல்லாமல், தலை வாழை இலை போட்டு பெரிய விருந்து போல் ஏற்பாடு செய்துள்ளார்கள். அரிசி சாதம் மட்டுமே 5000 கிலோ செய்துள்ளோம்.. காலையில் டிபன், மதியம் தலை வாழை சாப்பாடு, இரவு டிபன் வழங்குகிறோம். மிகவும் சிறப்பாக உணவு இருக்க வேண்டும் என்றும், யாருக்கும் எந்த குறையும் இருக்கக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்கள். அதன்படி சிறப்பாக உணவு சமைத்து பரிமாறி வருகிறோம்.
இங்கு ஐந்து நாட்களாக இதுபோல் போய் கொண்டிருக்கிறது. விழா என்பது இன்றும் நாளையும் தான்.. ஆனால் அதற்கு முன்னதாக 3 நாட்களாகவே சாப்பாடு அறுசுவையில் தான் வழங்கி வருகிறோம்.. ஒவ்வொரு நாளுமே கடந்த 3 நாட்களாக 20 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி உள்ளோம்.. உணவு தயாரிக்க , சப்ளை செய்ய என மொத்தம் 650 முதல் 700 பேர் இருக்கிறார்கள்.. அது இல்லாமல் தூய்மை பணியாளர்கள் இருக்கிறார்கள்.. உணவு எல்லாருக்கும் ஒரே மாதிரி மிகவும் தரமாக விநியோகிக்கப்படுகிறது. கூட்டத்தை ஒழுங்குப்படுத்த தனிதனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது" என்றார். பழனி முருகன் கோயிலில் நாளை வரை மாநாடு நடைபெற உள்ளதால் பல ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications