பவுர்ணமி நாளில் ஸ்கெட்ச்.. சந்தன மரங்களை லூட் அடிக்கும் ‘புஷ்பா’! சிலிர்க்க வைக்கும் சிறுமலை கிரைம்!
திண்டுக்கல்: பவுர்ணமி நாளைக் குறி வைத்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சிறுமலையில் பல லட்சம் மதிப்பிலான சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படுவது வழக்கமாகி வரும் நிலையில், வனத்துறை மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தோட்ட உரிமையாளர்களும் வன ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிறுமலை.18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட சிறுமலையில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன.பல ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது.

இங்கு பல அரிய வகை மரங்களும் உயிரினங்களும் இருக்கின்றன. குறிப்பாக கேளையாடு, மான், முயல், முள்ளம்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட உயிரினங்களும் பல அரிய வகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.

சிறுமலை வனப்பகுதி: இங்கு இருக்கக்கூடிய மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சிறுமலையில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வகையான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் சிறுமலையிலிருந்து தாளக்காடு பகுதியில் உள்ள வேளாண்பண்ணையில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பேராசிரியராக பணிபுரியும் முருகேஷ் என்பவருக்கு சொந்தமான 50 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.

மரங்கள் கடத்தல்: இங்கு பலா மரம், வாழைமரம், சந்தன மரம், சில்வர் ஓக், மிளகு, இளவம் பஞ்சு உள்ளிட்ட பல வகையான விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கடந்த 2007, ஆம் ஆண்டுகளில் தனது விவசாய நிலத்தில் தான் வனத்துறையில் பணியாற்றும் வனத்துறை அதிகாரி என்பதால் சந்தன மரக் கன்றுகளை நடவு செய்துள்ளார். தற்பொழுது மரங்கள் 15 முதல் 17 வருடங்கள் முதிர்ச்சி அடைந்த நிலையில் அவற்றை சிலர் சட்டவிரோதமாக வெட்டி கடத்திச் செல்வதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

துப்பாக்கிகளுடன் கொள்ளை: குறிப்பாக தற்பொழுது தோட்டத்தில் பணிக்கு பணியாற்ற ஆட்கள் கிடைக்காததாலும் மேலும் தானும் வெளியூரில் பணியாற்ற செல்வதால் தோட்டத்தில் யாரும் இல்லாத சமயத்தில் குறிப்பாக பௌர்ணமி காலங்களில் உள்ளுறை சேர்ந்த சில நபர்கள் துப்பாக்கிகளுடன் இரவு நேரங்களில் தனது விவசாய நிலத்திற்குள் புகுந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை வெட்டி எடுத்துச் சென்றுள்ளதாக வேதனை தெரிவிக்கிறார். இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கேரளாவுக்கு கடத்தல்: மேலும் இங்கு இருக்கக்கூடிய சந்தன மரக்கடத்தலில் ஈடுபடக் கூடிய நபர்கள் சுமார் ஐந்து முதல் பத்து அடி வரை உள்ள சந்தன மரக் கட்டைகளை வெட்டி அவற்றை சிறிய துண்டுகளாக அளவீடு செய்து பின்னர் சிறிய பைகள் மூலம் சிறுமலை அடிவார பகுதியில் உள்ள அஞ்சுகுழிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து வியாபாரிகள் மூலம் நத்தம் பகுதிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து வியாபாரிகள் மூலம் கேரளாவிற்கு கடத்திச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு கேமரா: மேலும் இது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சந்தன மரத்தை கள்ளத்தனமாக வெட்டும்போது அவற்றில் ஒரு சில மரங்கள் தனது பக்குவத்தை நிறைவு பெறாத பட்சத்தில் அவற்றை பாதியிலேயே விட்டுச் செல்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் சந்தன மர கடத்தலில் ஈடுபடும் மர்ம கும்பல் அவ்வப்போது வனத்துறைக்கு சொந்தமான நிலங்களில் இருக்கும் சந்தன மரங்களையும் வெட்டி செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும் சிறுமலை சோதனைச் சாவடியில் அதிகாரிகள் வாகனங்களை முறையாக சோதனை இடுவதில்லை அது மட்டும் இன்றி அங்கு இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராவும் காட்சி பொருளாகவே இருக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடவடிக்கை தேவை: எனவே இது போன்று தொடர் சந்தன மரக் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுவதோடு இந்த கடத்தல் சம்பவங்கள் தொடருமேயானால் இன்னும் சில மாதங்களில் சிறுமலையே காணாமல் போகும் நிலைக்கு நேரிடும் என வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.














Click it and Unblock the Notifications