பழனி முருகன் கோவில் கிரிவலப் பாதை விவகாரம்.. தமிழக அரசு உடனே தலையிட எஸ்டிபிஐ கோரிக்கை
திண்டுக்கல்: பழனி கிரிவலப் பாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற முருகன் திருத்தலமான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். குறிப்பாக விடுமுறை நாட்கள், கிருத்திகை மற்றும் முருகனுக்கு உகந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் பழனி முருகன் கோயிலின் கிரிவல பாதையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்றுவது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவினை அடுத்து, பழனி கிரிவல பாதையில் ஆக்கிரமித்து கட்டியிருந்த 139 வீடுகள் மற்றும் பஞ்சாமிருத கடையையும் ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டது. இன்னும் பல ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பழனி கிரிவலப் பாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வேண்டுகோள் வைத்துள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பழனி முருகன் கோவில் மலை அடிவார கிரிவலப் பாதையில் உள்ள, சாலையோர வியாபாரிகளின் கடைகள் மற்றும் குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையில் தற்போது நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டிவருகிறது. கடந்த சில தினங்களாக ஜேசிபி எந்திரங்களுடன் கடைகள், குடியிருப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். பழனி பகுதியில் பெரிய அளவுக்கு விவசாயமோ அல்லது தொழிற்சாலைகளோ எதுவும் இல்லாத சூழலில், பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை நம்பியே பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரங்கள் உள்ளன. அதன் மூலமாகவே மற்ற வர்த்தகங்களும் நடைபெற்று வருகின்றன.
தற்போது உயர்நீதிமன்ற உத்தரவை அறநிலைத்துறையும், நகராட்சி நிர்வாகமும் செயல்படுத்துவதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தொடங்கி பங்குனி வரையிலான 5 மாதங்களில் நடைபெறும் விசேஷ கால வியாபாரங்கள் மூலம் தான் இவர்களின் ஓராண்டு வாழ்வாதாரம் உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் அறநிலைத்துறை மற்றும் நகராட்சியின் நடவடிக்கையால் அவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.
சுமார் 30 ஆயிரம் பேர் கொண்ட குடும்பங்களை கொண்ட சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாத வகையில் கொள்கைத் திட்டங்களை வகுத்து, தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்திட வேண்டும் எனவும், பழனி முருகன் கோவில் கிரிவலப் பாதையில் வியாபாரம் செய்து வந்த சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தமிழக அரசை வலியுறுத்தி வந்தன.
ஆனால், தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக, நீதிமன்ற உத்தரவு நகராட்சியால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரமும், குடியிருப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன. அகற்றப்படுவது வெறும் கடைகள் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரமும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.
ஆகவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பழனி முருகன் கோவில் மலை அடிவார கிரிவலப் பாதையில் உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்மிகத் தலமாக மட்டுமின்றி சுற்றுலாத் தலமாகவும் இப்பகுதி விளங்குவதால், தமிழக அரசு ஆன்மிக தலத்தின் தன்மைகளை பாதிக்காதவாறு, சுற்றுலாவை மேம்படுத்தி, அதன் மூலம் வர்த்தகர்களின் நலனையும் கருத்தில்கொண்டு கொள்கை முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற வியாபாரிகளின் கோரிக்கையையும் தமிழக அரசு பரிசீலித்து, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு நடவடிக்கையையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தற்போது நகராட்சி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு தேவையான மாற்று இடங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். அதோடு, நீதிமன்றம் சுட்டிக்காட்டியபடி, கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்களை தவிர்த்து வேறு ஒருவர் அதனைப் பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு, உரியவர்கள் மட்டுமே வியாபாரம் மேற்கொள்ளும் வகையில் வரைமுறைகளையும், கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications