என்னை போல் யாத்திரை செல்லுங்கள் விஜய்.. அரசியல் ஆலோசகரால் எதுவும் நடக்காது.. அண்ணாமலை கருத்து!
திண்டுக்கல்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இடையிலான சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்ய முடியாது என்று கூறியுள்ள அவர், மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனையை அறிந்து அரசியல் செய்யுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். கடந்த ஓராண்டாக அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகர் விஜய், கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட அரசியல் மாநாடு ஒன்றை நடத்தினார். இதனைத் தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், தவெகவில் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார்.

அதேபோல் இன்னொரு பக்கம் தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்பாக தவெகவில் விசிக முன்னாள் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா இணைந்தார். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா மூலமாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஏற்கனவே தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர். அதேபோல் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்காகவும் கடந்த தேர்தலில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. பெரும்பாலும் பிரசாந்த் கிஷோர் ஜெய்க்கிற குதிரைக்காக மட்டுமே பணியாற்றும் வழக்கம் கொண்டவர்.
இதனால் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு அரசியல்வாதிகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இவர்களின் சந்திப்பு குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், யார் ஒருவரை எத்தனை முறை சந்தித்தாலும், நாங்கள் மக்களை சந்தித்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களை சந்திக்கிறோம்.
மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனையை அறிந்து கொண்டு தீர்ப்பதே அரசியல். ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு, அரசியல் வியூக வகுப்பாளரை அழைத்து அருகில் உட்கார வைத்து செய்வதல்ல அரசியல். மக்களை கேட்கும் போது எதற்காக தேர்தல் வியூக வகுப்பாளர். சாதாரணமாக என் மண், என் மக்கள் யாத்திரை போல் யாத்திரை செல்ல வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும், காவடி எடுங்கள், தெருவில் நில்லுங்கள்.
மக்களை கேட்காமல் வேறு ஆலோசகர்களை வைத்து தேர்தலை சந்தித்தால், அந்த அரசியல்வாதிகளுக்கு மக்கள் பாடம் எடுப்பார்கள். சர்வே எடுக்கும் பசங்களுக்கு மக்களின் பசி தெரியுமா? திமுக கூட ஒரு நிறுவனம் நடத்துகிறது.. இன்னும் எத்தனை பேர் தான் அரசியல் ஆலோசகர்களை வைத்து அரசியல் செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications