போதை காளான் தெரியும்.. கிக்கேற்றும் குதிரை தாலி கிழக்கு தெரியுமா?.. கொடையில் ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்
திண்டுக்கல்: போதைக் காளான் பிரச்னையால் தவித்து வந்த கொடைக்கானலுக்கு புதுப் பிரச்னையாக குதிரை தாலி கிழங்கு களத்தில் இறங்கியுள்ளது. கவுஞ்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் இந்த குதிரை தாலி கிழங்குக்காகவே சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில், இந்த கிழங்கில் போதை உள்ளதா என்று ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருவது வழக்கம். கோடை வாசஸ்தலமான கொடைக்கானல் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

கொடைக்கானலில் விளையும் போதைக் காளானால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலையில், சிலர் சட்ட விரோதமாக சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து விற்பனை செய்து வந்தனர். இதனால் பல்வேறு குற்றச் சம்பவங்களும் நிகழ்ந்து வந்தன. இதையடுத்து, காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு போதைக் காளானை தற்போது ஓரளவுக்கு கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அண்மைக்காலமாக கொடைக்கானல், கவுஞ்சி பகுதியில் விளையும் குதிரை தாலி கிழக்குக்காகவே சுற்றுலாப் பயணிகள் பலரும் தற்போது கொடையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
கொடைக்கானல் கவுஞ்சி, பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குதிரை தாலி எனும் கிழங்கு விளைவிக்கப்படுகிறது. இந்த கிழங்கை பிடுங்கி, கற்களால் நசுக்கி அதனை முகர்ந்து பார்த்தால் அதிலிருந்து வெளிப்படும் வாசம் மூளைக்கு ஒருவிதமான சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறதாம். இந்த கிழங்கை பூண்டி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் சுற்றுலாப் பயணிகளுக்கு கொடுத்து பணத்தைப் பெற்று வருகிறார்.
இதுதொடர்பான வீடியோவை கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில், இளைஞர்கள் குதிரை தாலி கிழங்கை நுகர்ந்து பார்த்ததும் போதை ஏறியது போன்று சைகை செய்கின்றனர். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்க்கும் இளைஞர்கள் பலர் கவுஞ்சி பூண்டி பகுதிகளுக்கு ராஜாவை தேடி வர தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக, திண்டுக்கல் மது விலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, பூண்டி ராஜாவை நேற்று அழைத்து குதிரை தாலி கிழங்கை நுகர்வதால் என்ன செய்யும் என்று விசாரித்துள்ளனர். மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இளைஞர்களைக் கவரும் அந்த குதிரை தாலி கிழங்கில் போதை தன்மை உள்ளதா என்று காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த கிழங்கை சேகரித்து சென்னையில் உள்ள ஆய்வகத்து சோதனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். பரிசோதனை முடிவு வந்த பின்னர் இதுதொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications