பெண் அடிமைத்தனத்தை ஆதரிப்போர் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள்! ஆளுநர் ராதாகிருஷ்ணன் அட்டாக்
திண்டுக்கல்: பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் பெண் அடிமைத்தனத்தை எதிர்ப்பவர்களாக கருதப்படுவார்கள் என ஜார்கண்ட் ஆளுநர் ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதில் உறுதியாக உள்ளது. வெவ்வேறு சாதி, மதங்களை சார்ந்த மக்கள் அனைவருக்கும் ஏற்ப ஒரே மாதிரியான சட்டத்தை அறிமுகம் செய்வதே இதன் நோக்கமாகும்.

திருமணம், விவாகரத்து, சொத்து பகிர்வு முறையில் இருக்கும் பாகுபாட்டை அகற்றி ஒரே மாதிரியான நடைமுறையை கொண்டு வருவது தான் பொது சிவில் சட்டத்தின் பொதுவான கரு என கூறப்படுகிறது. பொது சிவில் சட்டத்துக்கு ஒர தரப்பு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மற்றொரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதாவது பாஜக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள பல கட்சிகள் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரிக்கின்றன. அதேவேளையில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து வருகின்றன. இந்த சட்டத்தை உள்நோக்கத்துடன் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனை மத்திய அரசு கைவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றன.
பொது சிவில் சட்டம் குறித்து ஏற்கனவே சட்ட கமிஷன் கருத்து கேட்பு நடத்தி இருந்தது. தற்போது 2வது முறையாக சட்ட கமிஷன் கருத்து கேட்பு நடத்தி வருகிறது. பொதுமக்கள், மதம்சார்ந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையே தான் பொது சிவில் சட்டத்தை அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் அதில் மசோதா நிறைவேற்றப்பட்டு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் தான் தமிழகத்தை சேர்ந்தவரும், ஜார்கண்ட் முதல்வருமான ராதாகிருஷ்ணன் பொது சிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஆளுநர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‛‛பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் பெண் அடிமைத்தனத்தை ஆதரிப்பவர்களாக எதிர்காலத்தில் கருதப்படுவார்கள். எது சமுதாயத்துக்கு நல்லது என்பதை அறிந்து அனைவரும் ஒரு மனதாக ஆதரிக்க வேண்டும். சமுதாயத்துக்கு எதிரானதை ஒருமனதாக எதிர்க்க வேண்டும்'' என்றார். இதன்மூலம் பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என ஆளுநர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதோடு, எதிர்க்கும் எதிர்க்கட்சியினரை அவர் விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications