தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நில அதிர்வுகளை எதிர்கொள்ளும் கிராமம்.. எங்கே? ஏன்?
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே கே.கீரனூர் கிராமத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நில அதிர்வால் வீடுகளில் விரிசல்கள் உண்டான நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கீரனூர் கிராமத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது.
இதனால் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்களும் சில வீடுகளில் ஓடுகளும் உடைந்து சேதமடைந்தன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து தெரு ஓரங்களிலும் சாலைகளிலும் தஞ்சம் அடைந்தனர்

இரண்டு நாட்கள் தொடர் நில அதிர்வு
அதனால் அப்போது ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் மற்றும் புவியியல் துறையினர் வந்து ஆய்வு செய்தனர். டெல்லியில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் 1.5 ரிக்டர் அளவு கோலில் நில அதிர்வு பதிவானதாக தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாள் தொடர்ந்து லேசான சத்தங்களுடன் நில அதிர்வுகள் ஏற்பட்டன.

நேற்று நில அதிர்வு
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10.50 மணி அளவில் பெரும் சத்தத்துடன் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. அச்சமடைந்த பொதுமக்கள் வட்டாட்சியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வட்டாட்சியர் முத்துச்சாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் காவல்துறையினர் அங்கு சென்று பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர்
மீண்டும் நில அதிர்வு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாகவும் சாலையோரங்களிலும் காத்திருந்தனர். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், வட்டாட்சியர் முத்துசாமி, கனிமவள உதவி இயக்குனர் பூர்ண வேல், புவியியலாளர் அஸ்வினி ஆகிய குழுவினர் கீரனூர் கிராம பகுதிக்கு வந்து விரிசல் ஏற்பட்டு உள்ள வீடுகளில் நேரில் ஆய்வு செய்தனர்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
அதிக சேதங்களை சந்தித்த வீடுளுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டம் மூலமாக புதிதாக வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லேசான விரிசல் ஏற்பட்ட வீடுகள் சீரமைத்து தரப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது ஏன் என்பதை கண்டறியும் வரை மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என்று அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர், சேதமடைந்த வீடுகளில் வசித்து வருபவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு போதிய இடமும் உணவும் ஏற்படுத்தித் தர வட்டாட்சியருக்குக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications