எலே நீங்க ஒரு ஆர்ட்டிஸ்டுனு நிரூபிச்சுட்டீங்களே.. அம்மன்களுக்கு ஆதார் கார்டு..! திருவிழாவில் கலகல
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அம்மனுக்கே ஆதார் கார்டு அடித்து திருவிழா கொண்டாடி இருக்கின்றனர் அந்த கிராம மக்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவ நெட்டிசன்கள் தங்கள் கமெண்ட்டுகளை பறக்க விட்டு வருகின்றனர்.
பய புடிச்சிட்டான்.. எல்லாம் டெக்னாலஜி என படத்தில் டயலாக் வருவது போல்... தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில், பாரம்பரிய நிகழ்ச்சிகளிலும் நவீனங்கள் புகுந்து விட்டது.

தற்போது வீடியோ கால், மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பம் என திருமணங்கள் அடுத்த கட்ட நிலைக்கு சென்று விட்டது போல் திருவிழாக்களும் வேற லெவலுக்கு சென்று விட்டது.
முதலில் வெள்ளை துணியில் திருமண அழைப்பு என எழுதி வைத்த பேனர் கலாச்சாரம் தற்போது நவீன யுக டிஜிட்டல் புரட்சியில் அடுத்தடுத்து பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. மீம் கிரியேட்டர்ஸ் போல ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்ற ரீதியில் பல ப்ளக்ஸ் பேனர்கள் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.

அப்படி கோவில் திருவிழாவுக்கு வைக்கப்பட்ட பேனர் தான் இப்போது இண்டர்நெட்டை கலக்கி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள பொம்மனம்பட்டி கிராமத்தில் சுமார் 400-ஆண்டுகள் பழமையான காளியம்மன்,பகவதியம்மன் கோவில் உள்ளது. ஊரின் காவல் தெய்வங்கள் கொண்ட இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டும் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கிய இத்திருவிழா வெகுவிமர்ச்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் பூங்கரகத்தில் எழுந்தருளி தாரை தப்பட்டை வான வேடிக்கைகள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் தொடர்ந்து ஏராளமான பெண்கள் மாவிளக்கு, தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேற்றிக் கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து மாலை பொங்கல் வைக்கும், கிடாய் வெட்டும் வைபவமும் நடைபெற்றது.

இத்திருவிழாவில் கோவிலின் பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் அம்மனுக்கே ஆதார் கார்டு அடித்து வைக்கப்பட்டிருந்த பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. காளியம்மனுக்கு மட்டுமல்லாது, பகவதி அம்மன், முத்தாலம்மன், கன்னிமார், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் பேனரில் ஆதார் கார்டு போல டிசைன் செய்து வைத்திருந்தனர்.

ஒவ்வொரு அம்மனின் புகைப்படத்திற்கு கீழேயும் அம்மனின் பெயர் பிறந்த நாளுக்கு 400 வருடங்கள் என குறிப்பிட்டு வைக்கப்பட்டிருந்த இந்த பேனர் பக்தர்களையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து திருவிழாவில் இரவு நடந்த கலைநிகழ்ச்சியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை தத்ருபமாக செய்து காண்பித்தது, பக்தர்களை பக்திபரவசத்தில் ஆழ்த்தியது . இத்திருவிழாவில் சென்னை, மதுரை, கோவை, தேனி, நெல்லை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications