திமுக மேயரிடமே திமுக கவுன்சிலர் வாக்குவாதம்.. "நான் என்ன ரப்பர் ஸ்டாம்பா?" பரபரத்த திண்டுக்கல்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர் இந்திராணி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக மேயரை நோக்கி கேள்விக்கணைகளை வீசிய கவுன்சிலர் இந்திராணி, கடந்த 15 மாதங்களாக ரப்பர் ஸ்டாம்பை போல் தாம் மாமன்றக் கூட்டத்துக்கு வந்து செல்வதாகவும் ஒரு வேலை கூட நடக்கவில்லை எனவும் ஆவேசம் காட்டினார்.

அப்போது திண்டுக்கல் மேயர் இளமதி எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் விழித்த நிலையில், துணை மேயர் ராஜப்பா குறுக்கிட்டு பெண் கவுன்சிலர் இந்திராணியை அமருமாறும் அவரது கோரிக்கை பற்றி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இதனால் மீண்டும் டென்ஷனான திமுக பெண் கவுன்சிலர் இந்திராணி, சுகாதார நிலை குறித்து தாம் ஆய்வு செய்து சமர்பித்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும்ம் எடுக்காதது ஏன் என வினவினார். இதனால் திண்டுக்கல் திமுக மேயர் இளமதியும், திமுக துணை மேயர் ராஜப்பாவும் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் தடுமாறினர்.
திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலரே வாக்குவாதம் செய்திருக்கும் நிகழ்வு அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடலூர், வேலூர், நெல்லை, ஈரோடு உள்ளிட்ட மாநகராட்சிகளில் திமுக மேயர்களுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் குரல் கொடுத்த நிலையில் இப்போது அந்த பட்டியலில் திண்டுக்கல் மாநகராட்சியும் இணைந்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி 3வது வார்டு கவுன்சிலரான இந்திராணி, திண்டுக்கல் மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது பேசப்பட்டன. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சாதாரண எளிய பின்னணியை கொண்ட இளமதியை மேயராக்கினார் அமைச்சர் ஐ.பெரியசாமி.












Click it and Unblock the Notifications