இது லிஸ்ட்லயே இல்லையே? திண்டுக்கல் சீனிவாசனுக்கு இப்படி ஒரு ஷாக்கா? வேலி தாண்டும் வெள்ளாடு.. யார்?
திண்டுக்கல் : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் திண்டுக்கல் அதிமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. காரணம் ஓபிஎஸ் தரப்பில் இணைந்துள்ள இரு ஒன்றிய செயலாளர்கள், திண்டுக்கல் சீனிவாசன் தரப்பில் இருக்கும் நான்கு ஒன்றிய செயலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதில் இருவர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவு தர தயாராகி வருவதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை கூட்டி இருக்கிறது.
அதிமுக அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தற்போது அதிமுக ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை வளைக்கும் முயற்சியானது ஓபிஎஸ் தரப்பால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கு ஓரளவு பலனும் கிடைத்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பால் அந்த முயற்சி தற்காலிக சுணக்கம் கண்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், பல மாவட்டங்களில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தீவிரமாகி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஓபிஎஸ் தரப்பு
திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் அவர் தரப்புக்கு ஆதரவு திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன், ராமநாதபுரம் தர்மர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தங்கள் தரப்பிலிருந்து ஓபிஎஸ் அணிக்கு பலம் கூட்டும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் தற்போது ஓபிஎஸ் அணியில் இணைந்திருக்கும் ஒன்றிய செயலாளர்களும், 'தலைமையிடம்' நல்ல பெயர் வாங்குவதற்காக நிர்வாகிகளை அழைத்து வர ஆர்வம் காட்டுகின்றனர்.

திண்டுக்கல் அதிமுக
திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரது கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இரு தரப்பினரும் இணக்கமாக சென்ற நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. திண்டுக்கல் சீனிவாசன் கட்டுப்பாட்டில் இருக்கும் மேற்கு மாவட்டத்தில் குறிப்பாக மாநகராட்சி எல்லைக்குள் நத்தம் விஸ்வநாதன் ஆர்ப்பாட்டம் நடத்தியது பெரிய அளவில் கட்சிக்குள் உரசலை ஏற்படுத்தி இருக்கிறது.

அணி தாவும் நிர்வாகிகள்
அதே நேரத்தில் ஒன்றிய செயலாளர் ஒருவரின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் இருதரப்பினரையும் தவிர்த்து ஓபிஎஸ் அணியில் ஐக்கியமாகி விடலாமா என யோசித்து வருகின்றனர். இந்த தகவல் ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்திருக்கும் நிலையில் ஒன்றிய செயலாளர்கள் உடனான பேச்சுவார்த்தை தீவிரமாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணையில் முக்கிய முகங்களாக வேடசந்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் பசும்பொன் ஆகியோர் ஓபிஎஸ் கரத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தீவிர பேச்சுவார்த்தை
இது தொடர்பாக அதிமுக தரப்பில் இருக்கும் நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னதாக பல நிர்வாகிகள் ஓபிஎஸ் அணிக்கு வர தயாராக இருந்ததாகவும் சில காரணங்கள் காரணமாக சந்திப்பு தள்ளிப் போன நிலையில் தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் ஓபிஎஸ் அணிக்கு வர ஒன்றிய செயலாளர்கள் தயாராகி உள்ளனர். நான்கு ஒன்றிய செயலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் தீர்ப்புக்கு முன்னதாக அல்லது தீர்ப்புக்கு பிறகு இரண்டு ஒன்றிய செயலாளர் ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளனர் எனக் கூறுகின்றனர்.

கண்காணிக்க உத்தரவு
குறிப்பாக திண்டுக்கல் சீனிவாசன் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு மாவட்ட அதிமுகவில் இரு ஒன்றிய செயலாளர்கள் ஓபிஎஸ் தரப்பில் இணைவதற்கான தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன. இதனால் திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ள நிலையில் அந்த ஒன்றிய செயலாளர்கள் யார் என கண்டறிந்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தொடங்கியிருப்பதாக கூறுகின்றனர் நிர்வாகிகள். அதே நேரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தான் அணி தாவும் படலங்கள் இருக்கும் எனவும் அதுவரை நிர்வாகிகளை கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications