அபுதாபி ஏர்போர்டில் டிரோன் தாக்குதல்.. 2 இந்தியர்கள் உட்பட மூவர் பலி.. ஹவுத்தி இயக்கம் பொறுப்பேற்பு
அபுதாபி: அபுதாபி விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பகுதியில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் தற்போது உள்ள விமான நிலையத்தில் தற்போது விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
வரும் ஆண்டுகளில் அபுதாபி விமான நிலையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதால் அதற்கேற்ப விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

டிரோன் தாக்குதல்
இந்நிலையில், அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் ஆளில்லா டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அபுதாபியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பகுதியில் இரண்டு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வளைகுடா அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஏமனின் ஹவுத்தி இயக்கம் ஈரானுடன் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் பலி
இது தொடர்பாக அந்நாட்டு அரசின் WAM செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அபுதாபியில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேர், பாகிஸ்தான் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் 6 பேர் லேசான காயமடைந்துள்ளனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் வெளியான வீடியோக்களில் விபத்து நடந்த இடத்தில் இருந்து கரும் புகை பரவுவது தெரிகிறது.

போலீசார் தகவல்
முன்னதாக அபுதாபி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் நடைபெறும் இடத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற மூன்று டேங்கர்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தீ விபத்து ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் ஏற்பட்டிருக்கலாம். இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தனர்.

எப்படி நடந்தது
கடல் வழியாக அபுதாபி அருகே வந்து, அங்கிருந்து டிரோன்களை பறக்கவிட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிரோன்கள் அங்கு விமான நிலையத்தின் கட்டுமானம் நடைபெற்று வந்த பகுதியில் இருந்த டேங்கர் லாரிகள் மீது மோதியதில் அவை வெடித்துச் சிதறியுள்ளன. இதில் குறைந்தபட்சம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

6 பேர் காயம்
இந்தத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலால் விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஹவுதி இயக்கம்
இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுதி இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதை ஹவுதி ராணுவ பிரிவின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இருப்பினும், தாக்குதல் குறித்துக் கூடுதல் தகவல்கள் எதையும் அவர் கூறவில்லை. ஐக்கிய அமீரகத்தின் மீது ஹவுத்தி படையினர் தாக்குதல் நடத்துவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 14, 2019இல் சவூதி அரேபியாவில் உள்ள இரண்டு முக்கிய எண்ணெய் கிணறுகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015 முதல் ஏமன் மீது ஐக்கிய அமீரகம் போர் தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications