விபத்தில் 2 வயது குழந்தை பலியான போதும் டிரைவரை மன்னித்துவிட்ட கேரள தம்பதி! உருக்கமாக சொன்ன விஷயம்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில், தாயின் கண்மறைவில் சென்று விளையாடிய குழந்தை, விபத்தில் சிக்கி உயிரிழந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய கேரளாவை சேர்ந்த தம்பதி, டிரைவரை தண்டிக்க விரும்பவில்லை என்று கூறி புகார் அளிக்க மறுத்துள்ளனர். துயரமான தருணத்திலும் பாதிக்கப்பட்ட பெற்றோர் செய்த செயலும் அதற்கு கூறியகாரணமும் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
2 வயது கூட நிறைவடையாத தங்கள் மகனை பறிகொடுத்த துக்கத்திலும், பாதிக்கப்பட்ட பெற்றோர் எடுத்த இந்த முடிவு சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வந்த கேரளாவை சேர்ந்த குடும்பதான் இது போன்ற ஒரு முடிவை எடுத்துள்ளது. இந்த சோகமான நிகழ்வு குறித்த விவரம் வருமாறு:-

காரை பின்பக்கமாக திருப்பும்போது
கேரளாவை சேர்ந்தவர் செராபுதின். துபாயில் பணியாற்றி வரும் செராபுதின் தனது மனைவி மற்றும் 22 மாதமே ஆன குழந்தை ஆலன் ருமியுடன் வசித்து வந்தனர். வயதுக்கேற்ற குறும்புடன் சேட்டை செய்து விளையாடி வந்த ஆலன் ரூமி, சம்பவத்தன்று தனது தாய், குப்பை கொட்டுவதற்காக தனது குடியிருப்பு வளாகத்தில் உள்ள கார் பார்க்கிங் பகுதிக்கு சென்ற போது கூடவே சென்றுள்ளான்.
தாயார் குப்பை கொட்டும் போது, அங்கு ஓடியாடி விளையாடிய போது, அங்கு பார்க்கிங்கில் இருந்து காரை பின்னோக்கி எடுத்துள்ளார். குழந்தை நின்றது தெரியாமல் காரை இயக்கியதில் குழந்தை மீது மோதியது. உடனடியாக அந்த காரின் டிரைவர் விபத்தில் சிக்கிய குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார்.
கேரள தம்பதி எடுத்த முடிவு
ஆம்புலன்ஸ்க்கு காத்திராமல் தனது காரிலேயே கொண்டு சென்றுள்ளார். எனினும், மருத்துவமனைக்கு சென்ற போது குழந்தை உள்காயங்களால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து டிரைவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் யார் மீது குற்றம் சொல்வதற்கு இல்லை. அனைவர் மீதும் தவறு இருக்கிறது. நாங்கள் அவர் மீது புகாரளிக்கவில்லை என குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் கூறியுள்ளனர்.
இதையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். விபத்து ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். அனைவரும் அஜாக்கிரதையாக இருந்துவிட்டனர். டிரைவரை தண்டிப்பதால் மட்டும் என் மகன் கிடைத்துவிட மாட்டான். அந்த துயரத்தில் இருந்து மீண்டு வர விரும்புகிறோம். எங்கள் வாழ்வில் ஒரு வெளிச்சத்தை மகன் கொடுத்தான். எங்கள் மகன் இல்லை என்பதை இனி ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்" என்றார்.
சோகத்துடன் நாடு திரும்பியுள்ளனர்
ஆலன் ருமி உடல் துபாயில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் தங்கள் சொந்த ஊரான கேரளாவிற்கு தற்போது திரும்பியுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவரும் இந்தியாவை சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பேமிலி விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செட்டில் ஆக திட்டமிட்ட செரபுதின் குடும்பத்திற்கு தாங்க முடியாத சோகம் ஏற்பட்டதையடுத்து தற்போது தாய் நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய டிரைவருக்கும் ஓரிரு நாட்கள் சட்ட நடவடிக்கைகள் முடிந்த பிறகு எந்த சிக்கலும் இன்றி அவர் நாடு திரும்ப முடியும் என்று சொல்லப்படுகிறது. குழந்தையை பறிகொடுத்த துயரத்திலும் தங்கள் தவறையும் ஒப்புக்கொண்டு, பக்குவமாக நடந்து கொண்ட பெற்றோருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications