"யாரும் வாடகை பற்றி கவலைப்படாதீங்க.." துபாய் & அபுதாபியிடம் இருந்து வந்த முக்கிய அறிவிப்பு
துபாய்: ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கில் விமானச் சேவை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் பயணிகள் அங்கிருந்து கிளம்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் சூழலில், துபாய் மற்றும் அபுதாபி அரசுகள் இது தொடர்பாக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது அங்குச் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குப் பேருதவியாக இருக்கும்.
மத்திய கிழக்கில் இப்போது போர் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் அமெரிக்கா- இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை இரு நாடுகளும் தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்து 4 வாரங்களுக்குத் தாக்குதல்கள் தொடரும் என டிரம்ப் கூறியிருக்கிறார்.

உச்சக்கட்ட பதற்றம்
இது ஒரு பக்கம் இருக்க.. மற்றொருபுறம் ஈரானும் பதிலடி தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்க ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால் அங்கு விமானச் சேவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானங்கள் ரத்து
சர்வதேச பயணிகளுக்கு, குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பியப் பயணிகளை, ஆசிய நாடுகள் உடன் இணைக்கும் ஒரு ஹப்பாக ஐக்கிய அமீரகம் இருக்கும் சூழலில், அங்கு விமானச் சேவை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் இருந்து சுமார் 1500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே விமான ரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு உதவும் வகையில் ஐக்கிய அமீரகம் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் சிக்கியுள்ளவர்களை ஹோட்டலில் இருந்து காலி செய்யும்படி வற்புறுத்தக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச பயணிகள்
விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பல ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கேட்கும் நாள் வரை தங்க அனுமதிக்குமாறு ஹோட்டல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்த முடியாத பயணிகளின் விவரத்தை அரசுக்கு அளித்தால்.. அரசே அவர்களுக்கான ஹோட்டல் கட்டணத்தைச் செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
சுற்றுலாப் பயணிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்கள் தொடர்ச்சியாகத் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்த வழிகாட்டுதல்கள் அறிவுறுத்தியுள்ளன. பயண தடையால் நாட்டை கிளம்ப முடியாமல் சிக்கியுள்ள பயணிகளால் ரூம் வாடைகையை செலுத்த முடியாமல் போகும்போது, அறைகளை காலி செய்யுமாறு வற்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துபாய்
துபாயைப் பொறுத்தவரை இது தொடர்பாகத் துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட விருந்தினர்கள் எந்த ரூமில் முதலில் புக் செய்து இருந்தனரோ.. அதே ரூம்களில் அவர்களைத் தங்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது நிலவும் அசாதாரண சூழல் காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஹோட்டல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களால் உடனடியாக வாடகை செலுத்த முடியவில்லை என்றாலும் காலி செய்யச் சொல்லக்கூடாது என்றும் கூடுதல் டைம் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அபுதாபி
அபுதாபி அதிகாரிகளும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளனர். அதிலும் அபுதாபி அதிகாரிகள் இது ஒரு படி மேலே சென்று, சிக்கித் தவிக்கும் விருந்தினர்களுக்கான தங்குமிட செலவுகளை அரசு ஏற்கும் என்று உறுதி செய்துள்ளது. விமானச் சேவை சீராகி விருந்தினர்கள் கிளம்பும் வரை அங்கேயே தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூடுதல் நாட்களுக்கு ஆகும் செலவுகளை அபுதாபி அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications