துபாய் சர்வதேச விமான நிலையம் திடீரென மூடப்பட்டது.. விமானங்கள் ரத்து.. அவசர அறிவிப்பு
துபாய்: உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் இன்று அதிகாலை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து யாரும் துபாய் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஈரான், துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு ஒன்று பற்றி எரிந்தது. மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டதால், அதனை அணைக்க துபாய் அதிகாரிகள் விரைந்தனர். நிலைமை தற்போது அங்கு கட்டுக்குள் இருக்கிறது. எனினும் பயணிகள் பாதுகாப்பு கருதி துபாய் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமானங்கள் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

துபாய் ஊடக அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதனால் இந்த திடீர் மூடல் என்ற துல்லியமான காரணத்தை அதிகாரிகள் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், பயணிகளின் பாதுகாப்புக்கே தங்களின் முதல் முன்னுரிமை என்பதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.
எமிரேட்ஸ் நிறுவனம் கோரிக்கை
துபாயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம், தனது பயணிகளுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளது. "தயவுசெய்து யாரும் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வர வேண்டாம். நிலைமை சீரானதும் புதிய தகவல்கள் உடனே பகிரப்படும். பயணிகளின் பொறுமைக்கும் புரிதலுக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் பாதுகாப்பில் நாங்கள் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டோம்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது.
பயணிகளின் நிலை என்ன
இந்தத் திடீர் அறிவிப்பால் ஆயிரக்கணக்கான பயணிகள் துபாய் விமான நிலையத்திலும், தங்கும் விடுதிகளிலும் செய்வதறியாது திகைத்துள்ளனர். குறிப்பாக, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் மற்றும் இணைப்பு விமானங்களுக்காகக் காத்திருப்பவர்கள் பெரும் கவலையில் உள்ளனர். தங்களின் பயண விவரங்கள் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்
பயணிகள் கவனத்திற்கு
துபாய் விமான நிலையத்திற்குச் செல்லத் திட்டமிட்டிருப்பவர்கள் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் விமான நிறுவனத்தின் இணையதளம் அல்லது செயலியைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். புதிய அறிவிப்பு வரும் வரை அமைதி காக்குமாறு துபாய் அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் மனநிலையைக் கருத்தில் கொண்டு துபாய் அரசு எடுத்துள்ள இந்த முடிவு, ஒரு தற்காலிக அசௌகரியமாக இருந்தாலும், அது அனைவரின் நலனுக்காகவே எடுக்கப்பட்டிருப்பதால், பொறுமையை கடைபிடிப்பது நல்லது


Click it and Unblock the Notifications
