ரூ.226 கோடி.. லாட்டரியில் கொட்டிய அதிர்ஷ்டம்! கேரள அனில் குமாருக்கு கையும் ஓடல காலும் ஓடல!
துபாய்: ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் கேரளாவை சேர்ந்த 29 வயதே ஆன அனில்குமார் என்பவருக்கு வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பெரிய தொகை பரிசாக கிடைத்துள்ளது. ரூ.226 கோடி தொகையை பரிசாக வென்ற அனில் குமார், பரிசுத்தொகை பெற்ற எண்ணை தேர்வு செய்தது எப்படி? பணத்தை எப்படி செலவு செய்ய போகிறேன் என்பது உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று ஒரு பழமொழியை கேள்விப்பட்டு இருப்போம். இது எதற்கு பொருந்துகிறதோ.. இல்லையோ, லாட்டரியில் பரிசு அடிப்பவருக்கு 100 சதவீதம் பொருந்தும் எனலாம்.

பெயிண்ட் கடை ஊழியருக்கு ரூ.25 கோடி பரிசு
லாட்டரி டிக்கெட் வாங்க கூட காசு இல்லாமல், கடனாக வாங்கிவிட்டு சில மணி நேரத்தில் பல கோடிகளுக்கு அதிபதியாகும் நிகழ்வுகளும் கூட நடந்திருக்கிறது என்பதை கேள்விப்பட்டு இருப்போம். சமீபத்தில் கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இந்த ஓணம் பம்பரில் முதல் பரிசாக ரூ.25 கோடி பெயிண்ட் கடையில் வேலை பார்க்கும் சரத் நாயர் என்பவருக்கு அடித்தது.
இத்தனைக்கும் அவர் முதல் முறையாக பம்பர் லாட்டரியை வாங்கியிருந்தார். இது ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் வாழ்நாள் முழுவதும் டிக்கெட் வாங்கியும் ஒரு ரூபாய் கூட பரிசு அடிக்காமல் ஏமாந்தவர்கள்தான் ஏராளம். சரி, அதெல்லாம் இருக்கட்டும்... இங்கே விஷயத்திற்கு வருவோம்.
கேரள நபருக்கு ரூ.226 கோடி பரிசு
இந்தியாவில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி டிக்கெட்டுகள் இருப்பது போல, ஐக்கிய அரபு அமீரகத்திலும் லாட்டரிகள் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கி பணியாற்றும் இந்தியர்கள் பலருக்கும் அவ்வப்போது பரிசுத்தொகை அடித்துவிடுகிறது. சாதாரண கூலி வேலைக்கு போனவர்கள் கூட பல கோடிகளை வென்று வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடும் நிகழ்வுகள் கூட நடப்பதாக அங்குள்ளவர்கள் சொல்வதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக மிகப்பெரிய லாட்டரி பரிசான 100 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 226 கோடி ரூபாய்) கடந்த வாரம் ஒருவருக்கு அடித்திருந்தது. இவ்வளவு பெரிய பரிசுத்தொகையை வென்ற நபரின் பெயர் அனில் குமார் என்பது மட்டும் வெளியிடப்பட்டது. எனினும், பரிசு வென்றவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரம் வெளியாகவில்லை.
ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் மிகப்பெரிய தொகை
அனில் குமார் என்ற பெயரை வைத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்றில் மிகப்பெரிய தொகையை பரிசாக வென்ற நபர் இந்தியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், அதிலும் கேரள நபராக இருக்கலாம் எனவும் லாட்டரி பிரியர்கள் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக விவாதித்தனர்.
இந்த நிலையில், 226 கோடி ரூபாய் வென்ற அதிர்ஷ்டசாலியின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான அனில் குமார் போல்லா, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். தனது தாயின் பிறந்த மாதம் நவம்பர் என்பதால் அந்த மாதத்தை வைத்து நம்பரை செட் செய்துள்ளார். இதில்தான் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பெரும் தொகை பரிசாக அடித்துள்ளது.
என் வாழ்க்கை மொத்தமாக மாறிடும்
இது குறித்து அனில் குமார் கூறுகையில், "எனக்கு பரிசு அடித்ததை பார்த்தபோது ஆசீர்வதிக்கப்பட்டது போல உணர்கிறேன். தீபாவளி நாளில் எனக்கு பரிசுத்தொகை அடித்தது தெரியவந்தது. சில தொகையை அறக்கட்டளைக்கு செலுத்த உள்ளேன். எனது வாழ்க்கையை மொத்தமாக இந்த தொகை மாற்றிவிடும் என நினைக்கிறேன்.
ஒரு சூப்பர் கார் வாங்க உள்ளேன். ஒரு செவன் ஸ்டார் ஹோட்டலில் ஒரு மாதம் தங்க வேண்டும் என ஆசை உள்ளது. பரிசுத்தொகையில் கிடைத்த பணத்தை எப்படி செலவிடுவது என்பது பற்றி முடிவு செய்ய கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications