அமீரக இந்தியர்களை மீட்க துரித நடவடிக்கை தேவை.. அமீரக திமுக கோரிக்கை
துபாய்: அமீரகத்தில் தத்தளிக்கும் இந்தியர்களை தாய்நாட்டுக்குத் திரும்ப அழைக்க விமானங்களை அனுப்ப வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ். மீரான் விடுத்துள்ள கோரிக்கை அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இந்திய அரசுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தவித்து வரும் மக்களை தாய்நாட்டுக்கு திரும்ப வரவழைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என மிகவும் பணிவுடன் கேட்டு கொள்கிறேன். இதுபோன்ற கோரிக்கைய நமது அண்டை மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வைத்துள்ளார்கள்.

இவ்வாறு வரும் தமிழர்களை தனிமைப்படுத்த நேர்ந்தால் அவர்களின் சொந்த மாவட்ட தலைநரங்களிலேயே சிகிச்சை பெற அனுமதித்தல் மூலம் உறவினர்களுக்கும் இது வசதியாக இருக்கும். மேலும், எங்களின் நீண்டகால கோரிக்கையான வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியத்திற்காக , 2011 மார்ச் மாதத்தில் நமது கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படடு ஒப்புதல் அளித்த வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியத்தை உடனடியாக நடைமுறைக்கு வர தாங்கள் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இதுபோன்ற இக்காட்டான சூழலில் கேரளா அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கேரளா, பஞ்சாப், கோவா அரசுகள் இதற்கு முன் மாதிரியாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக கேரளாவில் NRK (Non Resident Kerala) என்ற அமைப்பின் மூலம் மாநில அரசு பல்வேறு உதவிகளை வெளிநாடு வாழ் மலையாளிகளுக்கு செய்து வருகிறது. அதேபோல தமிழகத்திலும் நல வாரியம் அமைத்து, உடனடியாக உறுப்பினர்களை நியமிக்க தமிழக அரசுக்கு தாங்கள் கோரிக்கை வைக்க வேண்டும். அதன் மூலம் கொரோனவால் சிக்கி தவித்து வரும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு உதவ முடியும் என்பதை கருத்தில் கொண்டு தங்கள் மூலமாக தமிழக அரசை வலியுறுத்த விரும்புகின்றேன்.
வேலைவாய்ப்பை இழந்து வரும் தமிழர்களுக்கு உதவி தொகை கொடுக்கவும் அரசு முன்வர தாங்கள் முயற்சிக்க வேண்டும். தற்போது நிலவி வரும் அபாயகரமான சூழலில் தமிழகத்திற்கு வருகைபுரியும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தகுந்த சமூக பாதுகாப்பை கொடுக்க வேண்டி திராவிட முன்னேற்ற கழகம் அரசுக்கு தகுந்த அழுத்தத்தை கொடுக்கவேண்டுமென அமீரக வாழ் தமிழர்கள் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications