இந்தியாவில் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கியது! மக்கள் குரலுக்கு இனி அதிக மதிப்பு!
10 வருட நீண்ட நெடிய காலத்துக்குப் பிறகு, இந்தியாவில் மத்திய அரசு, கூட்டணி ஆட்சிக்குள் மீண்டும் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இந்திய அரசியல் போக்கில் இது மிகப்பெரிய திருப்புமுனை. நரேந்திர மோடி அரசின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சி யாரையும் நம்பாமல், தனது சொந்த கட்சியான பாஜகவை மட்டுமே நம்பியிருந்தது. அந்த அளவுக்கு மிகப்பெரும் பெரும்பான்மையை வாரி வழங்கி வந்தனர் மக்கள்.
பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை என்ற நிலையில் இந்த லோக்சபா தேர்தலில் பாஜக பெற்றது 240 தொகுதிகள். கடந்த தேர்தலை ஒப்பிட்டால் 63 தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி 352 தொகுதிகளை வெற்றி கண்டது. இந்த முறை அவர்கள் பெற்றது 293. கூட்டணி கட்சிகளின் தயவு இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது என்ற நிலைமை பாஜகவுக்கு வந்திருப்பது பிரதமரின் முகத்தில் சோக வடுவாக நேற்று எதிரொலித்தது.

அடுத்த ஐந்தாண்டு காலமும், அவரது "பாடி லாங்குவேஜ்" அப்படித்தான் இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதுவரை ஏகபோக உரிமையை அனுபவித்து வந்த பாஜகவுக்கு.., தனது கூட்டணி கட்சிகளை கண்டுகொள்ளாத பாஜகவுக்கு.., இப்போது கூட்டணி கட்சிகளின் ஒவ்வொரு எம்.பி.க்களுமே தெய்வமாக தெரிகிறார்கள்.
ஆட்சியை அமைக்க மட்டும் கிடையாது.. அடுத்து 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடர வேண்டும் என்றாலும் கூட்டணி கட்சிகளை தினம் ஏதாவது ஒரு விஷயத்தில் அனுசரித்து சென்று கொண்டே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் மோடி அரசுக்கு இருக்கிறது.
பிரதமர் நாற்காலியின் 4 கால்களில் ஒரு கால் கூட்டணி கட்சிகளால் தாங்கி பிடிக்கப்பட்டுள்ளது. அது எப்போது உடையுமோ என்ற அச்சம், அந்த நாற்காலியின் மீது அமரும்போதெல்லாம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். எனவே இஷ்டத்திற்கு அதில் ஏறி உட்கார்ந்து ஆட முடியாது. அடக்கமாக, பவ்யமாக அமர வேண்டியிருக்கும். அல்லது உடைந்துவிடுமே!
கூட்டணி ஆட்சியால், அரச நடைமுறையின் ஸ்டைலே மாறக்கூடும். அதிரடி என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு செய்த பல விஷயங்கள் இனி நடக்காது என்று நம்பலாம். திடீரென தொலைக்காட்சியில் பிரதமர் தோன்றி.. உங்கள் கையில் இருக்கும் பணம் மதிப்பிழந்து விட்டது என்று சொல்லி மக்களை தெருவிற்கு ஓடவிடும் வாய்ப்பு இந்த ஐந்து வருடமும் இல்லவே இல்லை அடித்துச் சொல்லலாம்.
பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை, நெடுஞ்சாலை சுங்க கட்டணம் போன்றவை இஷ்டத்திற்கு ஏற்றப்பட்டு, நாட்டுக்காக, உங்கள் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை அள்ளிப் போடுங்கள் என்று எக்காளமிடும் குரல்கள் இனி ஒடுங்கிப் போகலாம்.
வரி வரி வரி என்று அனைத்திற்கும் வரி போடுகிறீர்களே.. உழைத்து சம்பாதிக்கும் பணத்தை, உட்கார்ந்தபடியே அரசு வாங்கிக் கொள்ளும் அரசு ஸ்லீப்பிங் பார்ட்னரா என்று கேட்கும் குரல்களை, நக்கல் சிரிப்புடன் இனிமேல் நிதி அமைச்சர் கடந்து செல்ல முடியாது.
மக்களை பாதிக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் அவரவர் மாநிலத்தில் பதில் சொல்லியாக வேண்டும். மோடி அரசு தன்னிச்சையாக நடப்பது தங்கள் கட்சி இருப்புக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்து கூட்டணி கட்சிகள், மத்திய அரசின் ஆட்சி முறையில் தலையீடு செய்தபடியே இருக்கும். இது எல்லாம் சேர்ந்து மக்களுக்கு பலன் அளிக்கும்.
இந்தியாவின் அடிநாதமான கூட்டாட்சி தத்துவம் செழித்து ஓங்கும். நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட நீதித்துறை விஷயங்களில் மோடி அரசு தலையீடு செய்வது, இனி, தவிர்க்கப்பட, வாய்ப்பு இருப்பதால், நீதித்துறை சுதந்திரம் காக்கப்படும். புலனாய்வு அமைப்புகள் கட்சி பார்த்து சோதனைகளை நடத்துவது குறைக்கப்படலாம்.
இஷ்டத்துக்கு புதிய சட்டங்களை, எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் நிறைவேற்றுவது மோடி அரசுக்கு சவாலாக மாறலாம். நாடாளுமன்ற மக்களவை என்பது, அடுத்த, ஐந்தாண்டு காலமும் நிஜமாகவே, மக்களுக்கான அவையாக காட்சியளிக்கும் என்று எதிர்பார்க்கலாம். பொதுத்துறை நிறுவனங்களை இஷ்டத்திற்கு தூக்கி தனியாருக்கு தாரை வார்ப்பது நிறுத்தப்படலாம்.
மோடி அரசு எதை செய்தாலும், பாஜகவினர் மதத்தை வைத்து பிரச்சாரம் செய்தாலும், அதைக்கூட விமர்சனம் செய்யாமல், வேலை வாய்ப்பு, விலைவாசி உயர்வு போன்றவை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவராமல், அதுகுறித்து தங்கள் விவாத நிகழ்ச்சிகளில் பேசாமல், அதேநேரம், எதிர்க்கட்சியினர் தும்மினால் கூட கடுமையாக விமர்சனம் செய்த பல்வேறு வட இந்திய ஊடகங்கள் இனிமேல் மக்களின் பிரச்சனைக்காக பேசத்தொடங்கும்.
மக்களின் பிரச்சனையை அரசின் காதுகளுக்கு கொண்டு செல்லாமல், பாஜக இந்த அளவுக்கு குறைவான சீட் வாங்குவதற்கு அந்த மீடியாக்கள் காரணம். அது இனிமேல் தவிர்க்கப்படும். அனைவருக்கும், அனைத்து கட்சிகளுக்கும், அந்த மீடியாக்களில் சம மதிப்பு தரப்படும்.
ஆக மொத்தம், மக்களாட்சியில் எதெல்லாம் நடைபெற வேண்டுமோ, இந்தியாவில் அவை இனி, சுமுகமாக நடைபெறும்!!












Click it and Unblock the Notifications