For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலையங்கம்: ஜம்மு காஷ்மீர் தேர்தலும், தலை மீது எழுதப்படும் மக்களின் தீர்ப்பும்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்று கூறப்படும் உதாரணம் ஜம்மு காஷ்மீருக்கு மிகப் பொருந்தும். இந்தியாவுக்கா, பாகிஸ்தானுக்காக என்ற அடிதடியில் சிக்கிய அப்பமாகி போனது காஷ்மீர். துப்பாக்கி சத்தமும், குண்டு வீச்சுக்களும் கோழி கூவலை போல சகஜமாகியிருந்த பூமி. காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் என்ற ஒன்று நடப்பதே மிகப்பெரும் சாதனையாக மாற்றப்பட்டுள்ளது. வாக்களிக்க வாருங்கள் என்று ஆட்சியாளர்கள் அழைப்பதும், வாக்களிப்பை புறக்கணியுங்கள் என்று ஹுரியத் போன்ற பிரிவினைவாத அமைப்புகள் அழைப்புவிடுப்பதுமாக அல்லோகலப்படும் ஒவ்வொரு தேர்தலும்.

பாகிஸ்தான் நாட்டு ஊடுருவல்காரர்கள் என்று நினைத்து உள்ளூரை சேர்ந்த மூன்று வாலிபர்களை 2010ல் ராணுவம் சுட்டு கொன்றபோது, ராணுவத்திற்கு எதிராக இங்கு பெரும் கலவரம் வெடித்தது. போராட்டம், கலவரம் என 112 பேரை காவு வாங்கியது அந்த சம்பவம். மத்திய மாநில அரசுகளால் கட்டுக்குள் கொண்டுவர முடியாத கலவரத்தை ஒற்றை வார்த்தை நிறுத்தியது. திரண்டிருந்த மக்கள் மத்தியில், பேசிய ஹுரியத் தலைவர் சையது அலி ஷா கிலானி, 'இது நமது வழிமுறை கிடையாது' என்றார். அந்த வார்த்தை கலவரத்தை கானல் நீராக மாற்றியது.

Will this assembly election change Jammu Kashmir's fate?

ஆனால் இந்த சம்பவம் நடந்து ஏழு மாதங்கள் கழித்து காஷ்மீரில் நடந்த பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்குமாறு சையது அலி ஷா கிலானி அறைகூவல் விடுத்தும், பதிவான வாக்குகள் 82 சதவீதம். வரலாறு காணாத வாக்குப்பதிவு. காஷ்மீர் மக்கள், இனியும் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடும் பொம்மைகள் இல்லை என்று நிரூபித்த தேர்தல் அது. இந்தியாவா-பாகிஸ்தானா என்ற குழப்பத்தில் நம்மை வைத்திருப்பதில் சிலருக்கு மெத்த ஆதாயம் உள்ளது என்பதை காஷ்மீரிகள் புரிந்துகொள்ள தொடங்கியுள்ளனர்.

லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகளும் அதையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. 2004ல் 35.2 சதவீதமும், 2009ல் 39.7 சதவீதமும், இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 49.5 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதை வைத்து பார்க்கும்போது காஷ்மீரிகள், இந்தியாவை கைவிடமாட்டார்கள் என்பது புலப்படுகிறது. சட்டசபை தேர்தல்களும் அவ்வாறே. 1996ல் 48.9 சதவீதம் வாக்குகள்தான் பதிவான நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில் 61 சதவீதம் பேர் ஓட்டுபோட்டுள்ளனர்.

நாட்டின் பிற மாநில மக்களை போலவே, காஷ்மீர் மக்களும் தண்ணீர், ரோடு, சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவோருக்குதான் வாக்கு என்ற மனநிலைக்கு மாறிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் போன்ற பன்னாட்டு விவகாரங்களில் கவனத்தை வைத்து அடிப்படை வசதியில்லாமல் கஷ்டப்படுவதுதான் மிச்சம் என்று நினைக்கின்றனர் அம்மக்கள். இப்போது எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதில்தான் அவர்கள் கவனம்.

2 மாதங்களுக்கு முன்பு வெள்ளத்தால் ஏற்பட்ட சேத நிவாரணத்தை, மாநில அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்ற அதிருப்தி, தேசிய மாநாட்டு கட்சிக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஐந்தாண்டு ஆட்சியில் இருந்ததால் ஏற்பட்ட இயல்பான அதிருப்தியும் இதோடு சேர்ந்து கொண்டுள்ளதால் மீண்டும் அக்கட்சி ஆட்சியை பிடிப்பது கஷ்டம். காங்கிரஸை பொருத்தளவில் இதுவரை ஆளும் கூட்டணியில்தான் இருந்தது. தேர்தலின்போதுதான் தனியாக பிரிந்து போட்டியிடுகிறது. எனவே தேசிய மாநாட்டு கட்சியின் நிலைமைதான் காங்கிரசுக்கும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

இப்போது போட்டி என்னவோ, மக்கள் ஜனநாயக கட்சிக்கும், திடீரென அதகளம் செய்து வரும் பாஜகவுக்கும்தான். மக்கள் ஜனநாயக கட்சி ஏற்கனவே ஒருமுறை காஷ்மீரை ஆண்டுள்ளது. ஆனால் பாஜக இதுவரை அங்கு கத்துகுட்டியாகத்தான் வலம் வந்தது. லோக்சபா தேர்தலில் ஜம்மு பிராந்தியத்தில் இரு தொகுதிகளை வென்ற உற்சாகம் பாஜகவை இப்போது அங்கு, ஆழ வேரூன்ற செய்துள்ளது. மோடியின் சமீபத்திய காஷ்மீர் விசிட்டுகள் கட்சியினருக்கு உத்வேகம் தந்துள்ளன. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்முவை குறிவைத்தே காய் நகர்த்துகிறது பாஜக, காரணம் பள்ளத்தாக்குப் பகுதியில் பாஜகவுக்கு சுத்தமாக செல்வாக்கு கிடையாது.

ஜம்மு காஷ்மீரை, 'ஜம்மு மற்றும் காஷ்மீர்' என இரண்டாக பிரித்தாளும் பாஜகவின் சூழ்ச்சி என்கிறது மக்கள் ஜனநாயக கட்சி. எது எப்படியோ, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒளிமயமான எதிர்காலம் பாஜகவின் கண்களுக்கு தெரிகிறது. எந்த கட்சியும் தனித்து ஆட்சியை பிடிப்பது கஷ்டம் என்பதால் கூட்டணி ஆட்சிக்கே வாய்ப்பு அதிகம் என்கின்றனர் காஷ்மீர் தேர்தல் கணிப்பாளர்கள். அதே நேரம் வழக்கம்போல பிரிவினைவாதிகள் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வர உள்ள நிலையில், காஷ்மீரில் தேர்தலை அமைதியாக நடத்தி, அதிகப்படியான வாக்காளர்களை வாக்களிக்க செய்து, காஷ்மீர் மீதான அதிகாரத்தை அழுந்த பதிக்க நினைக்கிறது இந்தியா. விளையாட்டு துறையில், ஒரு வார்த்தை பிரபலம். வெற்றியோ, தோல்வியோ விளையாட்டில் பங்கெடுப்பதுதான் முக்கியம் என்று. அதே நிலைதான் மோடிக்கும். பாஜக வெற்றி பெறுகிறதோ இல்லையோ, காஷ்மீர் தேர்தலுக்கு மக்கள் அதிக அளவு ஆதரவு அளிப்பது முக்கியம் என்று நினைக்கிறார்.

இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர்தான் தலைபகுதி. இப்போது அங்கு நடைபெறும் தேர்தல், இந்தியாவின் தலைமீது எழுதப்படும் மக்களின் தீர்ப்பு.

English summary
Will this assembly election change Jammu Kashmir's fate? As separatists call for election boycott, voting percentage will be crucial for the central government than BJP's victory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X