ஈரோடு தேர்தலில் பிரபலமான '1 ஓட்டு'.. சுவராஸ்ய தகவல்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஐந்தாவது சுற்று முடிவில் 7 வேட்பாளர்கள் தலா ஒரு ஓட்டு மட்டுமே பெற்றனர்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஐந்தாவது சுற்று முடிவில் 7 வேட்பாளர்கள் தலா ஒரு ஓட்டு மட்டுமே பெற்று இருந்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வே.ரா உடல்நலக் குறைவால் மறைந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு போட்டியிட்டார்.
தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் களமிறங்கினர்.மூன்று வாரங்களாக தீவிரமாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இறுதி நாளன்று பிரசாரம் செய்தனர்.

9 சதவீதம் அதிகம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 27-ந் தேதி நடந்தது. 238 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 32 மையங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டன. மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் உட்பட மொத்தம் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த இடைத்தேர்தலில் 74.69 % வாக்குகள் பதிவாகியிருந்தது. அதாவது ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட இது 9% அதிகம் ஆகும்.

16 மேசைகள்
ஈரோடு மாவட்டம் சித்தோடில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 மேசைகளில் வாக்குகள் எண்ணப்பட்டது. வேட்பாளர்களுடன் அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

யாருக்கு எத்தனை
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 398 தபால் ஓட்டுகள் பதிவாகின. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 250 ஓட்டுகளை பெற்றார். அதிமுகவின் தென்னரசுவுக்கு 104 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு 10 தபால் ஓட்டுகளும் கிடைத்தது. மாறாக 67 பேர் ஒரு தபால் ஓட்டுகளை கூட பெறவில்லை. மேலும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் கருணாகரனுக்கு 2 தபால் ஓட்டுகள் கிடைத்த நிலையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ஒரு தபால் ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார். மொத்தம் 25 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

45 ஆயிரம் வித்தியாசம்
முதல் சுற்றில் இருந்து 15 வது சுற்று வரை ஒவ்வொரு சுறறிலுமே ஈவிகேஎஸ் இளங்கோவனே முன்னிலை பெற்று வந்தார். ஈரோடு கிழக்கில் கடைசி சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 110556 வாக்குகள் பெற்று சுமார்66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43891 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 7984 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1115 வாக்குகளும் பெற்றனர்.

7 வேட்பாளர்கள்
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஐந்தாவது சுற்று முடிவில் 7 வேட்பாளர்கள் தலா ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளனர். 73வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் ஒரு வாக்கு பெறவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. 8.1 சதவீதம் வாக்குகள் இதுவரை சுயேட்சைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பெற்றுள்ளன. 66 சதவீதம் வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருக்கிறது. அதிமுக 24.3 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறது. தேமுதிக ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை 77 பேர் போட்டியிட்டுள்ளனர். அதில் கவனம் பெற்றவர்கள் 4 பேட்பாளர்கள் மட்டுமே. அதில் கடைசியில் ஈவிகேஎஸ் இளங்கோவனே வெற்றியை தொட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications