10 ரூபாய் இன்ஸ்டா சவால்..நடு ரோட்டில் இளைஞர் செய்த செயல்!..போலீஸ் அதிரடி..பறிபோன ரூ.3500
ஈரோடு: ஈரோட்டில் கொளுத்தும் வெயிலில், பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென சிக்னலில் நின்று குளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் மீனாட்சி சுத்தரனார் சாலையிலிருந்து பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், பன்னீர் செல்வம் பார்க் சந்திப்பில் சிக்னலில் வண்டியை நிறுத்தியுள்ளார். ஆனால் பச்சை விளக்கு எரிந்த பின்னரும் அவர் அங்கிருந்து பைக்கை எடுக்கவில்லை. பின்னால் இருந்தவர்கள் ஹாரன் அடிக்க, அந்த இடமே சற்று நேரத்தில் பரபரப்பானது. இப்படி இருக்கையில், திடீரென அந்த இளைஞர் ஒரு மக் தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றி கொண்டார். சுற்றி இருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

சரி அடிக்கிற வெயிலுக்கு தண்ணீரை ஊற்றுகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்த மக்களுக்கு மற்றொரு ஷாக்கிங். அதாவது அந்த இளைஞர் சாலையில் குளிக்க தொடங்கினார். இதனால் அக்கம் பக்கத்தில் இவருடன் நின்றுக்கொண்டிருந்தவர்கள் மீதும் தண்ணீர் தெரித்துள்ளது. அவர்கள் சத்தம்போட்ட உடனே அந்த இளைஞர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனால் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவியது. இதனை கவனித்த காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரிக்க தொடங்கினர்.
விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் சென்னிமலை வெள்ளோட்டை சேர்ந்த 26 வயது இளைஞன் பார்த்திபன் என்பது தெரியவந்தது. இவர் இன்ஸ்டாகிராம் பிரபலமாவார். இவருடைய பிரபலத்திற்கு காரணம், இவர் மேற்கொள்ளும் சவால்கள்தான். அதாவது இன்ஸ்டாகிராமில் இவருக்கு யாராவது சவால் விடுவார்கள். அந்த சவாலை ஏற்று இவர், அவர்கள் சொல்வதை செய்து காட்டுவார்.
உதாரணத்திற்கு, பச்சை மீனை சாப்பிடுவது, நள்ளிரவில் கிணற்றில் குளிப்பது, இரவு நேரத்தில் நடு ரோட்டில் தூங்குவது, போன்ற சவால்களை ஏற்று அதனை செய்தும் காட்டியிருக்கிறார். இந்த சவால்களின் வரிசையில்தான், "நடு ரோட்டில் குளித்தால் 10 ரூபாய் தருகிறேன்" என்று யாரோ இன்ஸ்டாகிராமில் சவால் விட இவர் சட்டென பைக்கை எடுத்துக்கொண்டு ரோட்டுக்கு கிளம்பியுள்ளார். பின்னாடியே இவரது நண்பர்கள் கேமிராவை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
அதன் பின்னர் நடந்த சம்பவம்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக இந்த விவகாரம் எல்லாம் காவல்துறைக்கு தெரிய வரவே ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியது, சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குவது என 3 பிரிவுகளின் கீழ், போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு ரூ.3500 அபராதமும் விதித்தனர். அதேபோல இந்த சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் சதி செயல்கள் இருக்கிறதா? என்கிற கோணத்தில் குற்றப்பிரிவு காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமிலும், இதர பல சோஷியல் மீடியாக்களிலும் லைக்ஸ் பெற்று பிரபலமாக மாற இதுபோன்ற செயல்களை பலரும் செய்து வருகின்றனர். ஆபாசமாக பேசுவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது, சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து பதிவிடுவது, சூடோ சையின்ஸ் எனப்படும் போலி அறிவியல் கருத்துக்களை பரப்புவது போன்றவற்றை நெட்டிசன்கள் அதிகம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications