செம உஷாரு.. பாஜகவுக்கு நாசூக்கா ‘அலெர்ட்’ மெசேஜ் அனுப்பிய எடப்பாடி! ஆஹா.. மேட்டர் இதானா?
பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து ஒரு முக்கிய வேண்டுகோள் சென்றுள்ளது.
ஈரோடு : பாஜகவை முன்னிலைப்படுத்தினால், சிறுபான்மையினர் வாக்குகள் தங்களுக்கு கிடைக்காது எனக் கருதும் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொகுதியில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டாம் என நாசூக்காக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, அண்ணாமலை நேற்று ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இன்றும் சில பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில், சிறுபான்மையின வாக்காளர்கள் சுமார் 17 சதவீதம் பேர் இருப்பதால், பாஜகவிற்கு, அதிமுக ஈபிஎஸ் தரப்பில் இருந்து ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

திமுக - அதிமுக போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகியவையும் களத்தில் உள்ளன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 22 மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் இந்த ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் அங்கீகாரம் என்ற ரீதியில் இந்த தேர்தலில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. இதனால் திமுகவே தேர்தல் பணிகளில் காங்கிரஸை விட மிகத் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதே நேரத்தில் கொங்கு மண்டலத்தை தங்களது கோட்டை என கூறிவரும் அதிமுகவும் இந்த தேர்தலை சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளது.

இஸ்லாமியர் வாக்குகள்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் அமைச்சர்களும் சுற்றிச் சுழன்று ஈரோடு கிழக்கில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் சுமார் 17 சதவீத வாக்காளர்கள் இஸ்லாமியர்கள் எனக் கூறப்படுகிறது. இது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவு என்பதால், இஸ்லாமியர்களின் வாக்குகளைக் கைப்பற்றுவதில் அதிமுக - திமுக இரு கட்சிகளுமே தீவிரம் காட்டி வருகின்றன. திமுக முன்னாள் அமைச்சர்கள் ஆவடி நாசர், கே.எஸ்.மஸ்தான் உள்ளிட்டோர் இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதியில் தேர்தல் பணி ஆற்றி வருகின்றனர்.

பாஜக நிர்வாகிகள் வேண்டாம்
அதேசமயம், அதிமுக, தங்கள் கூட்டணியில் பாஜக இருப்பது தங்களுக்கு இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினர் வாக்குகள் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கருதுவதாகக் கூறப்படுகிறது. அதிமுக மாஜி அமைச்சர்கள், சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் தீவிர பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், பாஜக நிர்வாகிகளை அதிகமாக தங்களுடன் அழைத்துச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. பாஜகவை முன்னிலைப்படுத்தினால் சிறுபான்மையினரின் வாக்கு தங்களுக்கு கிடைக்காது என்ற எச்சரிக்கை உணர்வுடன் அதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனராம்.

அலெர்ட் மெசேஜ்
இந்நிலையில் இன்னொரு தகவலும் ஈரோடு கிழக்கு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் நேற்றும், இன்றும் என 2 நாட்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிக்கு அண்ணாமலை வாக்கு சேகரிக்கச் செல்ல வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பாஜக தரப்பினரிடம் நாசூக்காக தெரிவித்துள்ளனராம்.

அண்ணாமலை பிரச்சாரம்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு வாக்கு கேட்டு சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்றால், சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக இழக்க நேரிடலாம் என்பதால் இப்படியொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அதிமுக ஈபிஎஸ் தரப்பினர் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்றபடி, இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலேயே அண்ணாமலையின் பிரச்சாரத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாம்.

இந்துக்கள் வசிக்கும் பகுதியில்
அதன்படி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று, இடையன்காட்டு வலசு, தெப்பக்குளம், மகாஜன உயர்நிலைப் பள்ளி, சூரம்பட்டி நால்ரோடு ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இன்று மாலை வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் தனது 2வது நாள் பிரசாரத்தை தொடங்கி, ஓங்காளியம்மன் கோவில், காந்தி சிலை, வி.வி.சி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

பாஜக கூட்டணி
முன்னதாக, ஈரோடு மாவட்டம் வில்லரசன்பட்டியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு வாக்கு கேட்டு இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பினர் முன் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, எங்களுக்கு வாக்களிக்கும் சிறுபான்மையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக சிலர் தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள். கூட்டணி வைப்பதால் ஒரு கட்சி சொல்வதை நாங்கள் கேட்போம் என்று நீங்கள் நினைக்கவேண்டாம். தமிழ்நாட்டில் சிறுபான்மையினர், தமிழா் உரிமையை பாதுகாக்க நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம் என்று பேசியுள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது சிறுபான்மையினர் மத்தியில் அதிமுக மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் அதை களையும் விதமாகவே ஈபிஎஸ் அவ்வாறு பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications