அதிமுக - பாஜக இனி தேர்தலை நினைத்து பார்க்கவே கூடாது.. அப்படி இருக்கனும் வெற்றி ..அமைச்சர் முத்துசாமி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்று அமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் இந்த வெற்றி அதிமுகவும் பாஜகவும் இனி தேர்தலை நினைத்து பார்க்கவே கூடாது என்ற அளவிற்கு இருக்க வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதிமுகவில் முன்னாள் எம்.எல்.ஏ கேஎஸ் தென்னரசு போட்டியிடுகிறார்.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. திமுகவின் மூத்த அமைச்சர்கள் ஈரோட்டில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

தீவிர ஓட்டு வேட்டை
அதேபோல், அதிமுகவும் அதன் கூட்டணி கட்சியுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள தேமுதிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளும் ஓட்டு வேட்டையில் இறங்கியிருக்கின்றனர். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கு பார்த்தாலுல் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடும் காட்சிகளையே காண முடிகிறது என்று சொல்லும் அளவுக்கு தேர்தல் வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு வித்தியாசத்தை பார்த்து..
அந்த வகையில், ஈரோடு அசோகபுரத்தில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசார கூட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ். இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வெண்டும். இந்த வாக்கு வித்தியாசத்தை பார்த்து எதிர்காலத்தில் அதிமுகவும் பாஜகவும் தேர்தலில் போட்டியிடுவதை நினைத்து கூட பார்க்கக் கூடாது.

தேர்தல் பணிமனை திறப்பு விழா
திமுகவை பொறுத்தவரை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்த வித பாகுபாடும் இன்றி நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். எனவே வாக்காளர்கள் எங்களுக்கு தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும்" என்றார். முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி பெரிய அக்ரஹாரம் பகுதியில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என் நேரு, நாசர், எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், முத்துசாமி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும்
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி, அதிமுக உடைந்து போக வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை என்றார். பேட்டியின் போது மேலும் அவர் கூறியதாவது:- எங்களை பொறுத்தவரை அந்தக் கட்சி (அதிமுக) உடைந்து விட வேண்டும் சின்னம் காணாமல் போய்விட வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. எங்களுடைய தலைவர்களும் அப்படிப்பட்ட எண்ணத்தில் இருந்தது இல்லை. அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.

எள்ளளவும் வருத்தம் இல்லை
அவர்கள் சின்னம் அவர்களுக்கு இருக்க வேண்டும். அவர்கள் கூட்டணி குறிப்பாக பாஜக அவர்களோடு இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது நாங்கள் மிகப்பெரிய வெற்றியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதுதான் எங்களுக்கு கிடைக்கிற மரியாதை, பெருமை. அதைத்தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள். ஒன்றாக இருப்பதிலே..அவர்களுக்கு சின்னம் கிடைத்திருப்பதோ எங்களுக்கு எள்ளளவும் வருத்தம் இல்லை. மகிழ்ச்சிதான். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications