ஈரோட்டில் 42 ஆயிரம் வாக்குகளை இழந்தோம்.. பாஜகவுடன் கூட்டணி வைத்ததே காரணம்.. புலம்பும் செங்கோட்டையன்!
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக 42 ஆயிரம் வாக்குகளை இழந்ததாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுக 42 ஆயிரம் வாக்குகளை இழந்ததாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் காலத்தில் திமுகவும் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறிய செங்கோட்டையன், கொள்கை வேறு கூட்டணி வேறு என்று கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் பெற்றிருந்தனர். இருவருக்குமான வாக்குகள் வித்தியாசம் 66,575 என அறிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுக்கூட்டம்
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கேஏ செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

செங்கோட்டையன் பேச்சு
இந்தப் பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் பேசுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி என்பது அதிமுக வெற்றி வாகை சூடிய பகுதி. நீங்கள் கவலைப்பட தேவையில்லை, 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளோம். இதில் 42 ஆயிரம் பேர் சிறுபான்மையினர். அவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர் நம்முடன் கூட்டணி இருப்பதன் காரணமாக மாற்றி வாக்களித்தனர். திமுகவும்தான் பாஜகவோடு வாஜ்பாய் அரசில் 5 ஆண்டுகள் கூட்டணி வைத்திருந்தனர்.

கொள்கை வேறு, கூட்டணி வேறு
எதற்காக சொல்கிறேன் என்றால் கொள்கை வேறு கூட்டணி வேறு என்பதை மறந்து விடக்கூடாது. உங்களை காக்கின்ற இயக்கமாக அதிமுக இருக்கும், தாழ்த்தப்பட்ட மக்கள் சிறுபான்மையினர் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே இயக்கமாக அதிமுக இருக்கும். ஏனென்றால் நாங்கள் புரட்சித் தலைவரின் வழியில் வந்தவர்கள், உங்களைப் பொறுத்தவரை ஜாதி இல்லை, மதம் இல்லை. ஆண், பெண் என்ற இரண்டு ஜாதிகள் மட்டுமே உள்ளது.

அதிமுகவின் கோட்டை
உங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக அதிமுக என்றைக்கும் இருக்கும். வரும் காலத்தில் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருக்கும் என்பதை நீங்கள் மாற்றிக் காட்ட வேண்டும், எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications