'ஓபிஎஸ்க்கு வேறுவழியே இல்லை'.. உற்சாகத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள்.. இனி என்ன செய்வார்?
ஓபிஎஸ்க்கு இனி எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்படுவதை தவிர வேறு வழி இல்லை என்கிறார்கள் இபிஎஸ் ஆதரவாளர்கள்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்ற நிலையில், ஈபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் "மீண்டும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நேரில் சந்திப்பு?" நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஓபிஎஸ்க்கு இனி எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்படுவதை தவிர வேறு வழி இல்லை என்கிறார்கள் இபிஎஸ் ஆதரவாளர்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா அண்மையில் மரணம் அடைந்தார். அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். அதிமுக பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அதிமுகவில் எடப்பாடி தரப்பு - ஓ. பன்னீர்செல்வம் தரப்பு என இரு பிரிவுகளாக இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் வெற்றிபெற இரட்டை இலை சின்னம் முக்கியம் என்பதால் அதிமுகவின் எந்தப் பிரிவின் வேட்பாளருக்கு அது கிடைக்கப்போகுது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசை தனது தரப்பு வேட்பாளராக அறிவித்தது. ஓ. பன்னீர்செல்வம் செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்தார். தங்கள் தரப்பு வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னத்தை வழங்க வேண்டுமென எடப்பாடி கே. பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தை அணுகினார், கட்சியின் பொதுக் குழுவைக்கூட்டி வேட்பாளரை முடிவுசெய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இதையடுத்து எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு உடனடியாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் தனது தரப்பு வேட்பாளரான தென்னரசுவை வேட்பாளராக ஏற்க சம்மதமா எனக் கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியது. மொத்த பொதுக் குழு உறுப்பினர்களான 2665 பேரில் 2,501 பேரின் ஆதரவு எடப்பாடி தரப்பிற்குக் கிடைத்தது. பன்னீர்செல்வம் தரப்பில் 128 பேர் படிவங்களைப் பெற்ற நிலையில், ஒருவர்கூட கே.எஸ். தென்னரசிற்கு எதிராக, படிவங்களைச் சமர்ப்பிக்கவில்லை.

இன்பஅதிர்ச்சி
இதையடுத்து தங்கள் தரப்பு வேட்பாளரான தென்னரசுவுக்கே அதிக பொதுக் குழு உறுப்பினர்கள் ஆதரவளிக்கின்றனர் என்பதற்கான ஆதாரங்களை நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார் அந்தக் கட்சியின் அவைத் தலைவரான தமிழ் மகன் உசேன். இதனிடையே நேற்றே ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த வைத்தியலிங்கம், கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இரட்டை இலை முடங்கிவிடக்கூடாது என்பதற்காக தங்கள் தரப்பு வேட்பாளரான செந்தில் முருகனை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். மேலும், இரட்டை இலை வெற்றிபெறுவதற்காக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் கூறி, திகைக்க வைத்தனர்.

செங்கோட்டையன்
இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ வேட்பாளரை முடிவுசெய்ய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரமளித்து இந்தியத் தேர்தல் ஆணையம் கடிதம் அளித்துள்ளது. இந்த அங்கீகாரம், தற்போதைய இடைத் தேர்தலுக்கு மட்டும் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனிடையே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஓபிஎஸ் வேட்பாளரை வாபஸ் பெற்றதற்கு நன்றி தெரிவித்ததுடன், நமது அண்ணன் ஓபிஎஸ் என்று கூறினார். இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இறங்கி வேலை செய்ய தொடங்கி உள்ளனர்.

ஓபிஎஸ்க்கு தோல்வி
இதனிடையே சசிகலா, ஓபிஎஸ்க்கு மத்தியில் தான்தான் உண்மையான அதிமுக என்று காண்பிப்பதில் எடப்பாடி பழனிச்சாமி கிட்டத்தட்ட வெற்றிபெற்றுவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். பொதுக்குழுவிலும் பெரும்பான்மை ஆதரவு இபிஎஸ்க்கே இருந்தது. தன்னை கட்சியை விட்டு நீக்கிய பொதுக்குழுவே வேட்பாளரைத் தேர்வு செய்யும் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டதில் இருந்தே அவருக்குத் தோல்வி உறுதியாகிவிட்டது என்று சொல்கிறார்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள். ஓபிஎஸ்ஐ கட்சியை விட்டு நீக்கி தீர்மானமும், கட்சியில் அவை தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனமும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதில் தமிழ் மகன் உசேன் நியமனத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

பாஜக உதவுமா?
எனவே இப்படியான சூழலில் இரட்டை இலை முடங்கி விடக்கூடாது என்ற எண்ணத்தில் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் கூறியிருந்தார். உண்மையில் அவர் உறுதியுடன் இல்லை என்கிறார்கள். 2017இல் இவரது தர்மயுத்தம் காரணமாகவே இரட்டை இலை முடங்கியது. தற்போதைய நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை இப்போது தோற்றுவிடுவோம் என்று புரிந்துவிட்டது அதனால் பின்வாங்கிவிட்டார் என்றும் இனிமேல் அவருக்கு சாதகமான சூழல் ஏற்படுவது கடினம் என்றும் சொல்கிறார்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள். பாஜக நமக்கு பின்னாளில் ஏதாவது பெரிய நம்பிக்கை அளிக்கும் என்று நினைத்து அவர் வேட்பாளரை அவர் திரும்பப் பெற்றிருந்தாலும் பெரிதாக ஏதும் கிடைக்காது என்றும், மீண்டும் அ.தி.மு.கவிற்குச் சென்றால்கூட இனி எடப்பாடிக்கு இணையான பதவி கிடைக்காத என்றும் எடப்பாடிக்குக் கீழேதான் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்கிறார்கள்.

சண்டை
ஓ பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை விசுவாசமாக இருப்பதே பெரிய பலம் என்று நினைத்து செயல்பட்டதாக கூறும் பத்திரிக்கையாளர்கள், எடப்பாடி பழனிசாமியே விசுவாசத்தை தாண்டி கட்சி மற்றும் மக்களிடையே செல்வாக்கை பெற வேண்டும் தீவிரமாக சண்டை இட்டதாக சொல்கிறார்கள். இதில் எடப்பாடி கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டதாகவும், இனி எடப்பாடி பழனிசாமியே முழு அதிமுகவை கட்டுப்பாட்டில் வைப்பார் என்று கூறுகிறார்கள். இனி ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படுவாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும் என்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள்.












Click it and Unblock the Notifications