அதிமுக, தவெக எஸ்கேப்.. பாஜகவின் நிலை? ஈரோடு இடைத் தேர்தல்: விஜய் தயங்குவது ஏன்?
ஈரோடு: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் ஒரு இடைத் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில், அது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு என்ன மாதிரியான சாதக பாதகங்களை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்கலாம்.
ஈரோடு கிழக்கு தொகுதி கடந்த ஒரு ஆண்டுக்குள் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை இழந்திருக்கிறது. 2021 இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக திருமகன் ஈவெரா போட்டியிட்டு சுமார் 67300 வாக்குகளைப் பெற்றார். அப்போது இவரை எதிர்த்து தாமாக சார்பில் யுவராஜா களம் இறக்கப்பட்டார். அவர் 58396 வாக்குகளைப் பெற்று தோல்வியை தழுவினார். வெற்றி வித்தியாசம் 8904 வாக்குகளே இருந்தது.

ஆனால், திருமகன் மறைவுக்குப் பின்னர் அந்தத் தொகுதியில் திமுக போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்தப் பூனைக்கு மணிக்கட்டும் விதமாக முதல்வர் ஸ்டாலின் திருமகனின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்தார். அதைக் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல; இளங்கோவனே எதிர்பார்க்கவில்லை.
ஏனெனில் அவர் அதற்கு முன்னதாக தான் கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு முன்னேறி வந்தார். அவரை தேர்தல் பிரச்சார களத்தில் இறங்கிவிடுவது சரியாக இருக்குமா? என பலரும் நினைத்தனர். இளங்கோவனே தன்னால் சமாளிக்க முடியுமா? என்று யோசித்ததாகப் பல பேட்டிகளில் கூறியிருந்தார்.
ஒரு பக்கம் மகனின் இழப்பு மற்றொரு பக்கம் உடல்நிலை என அவர் பல துன்பங்களை அனுபவித்து வந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவில் களம் கண்டார் இளங்கோவன். ஆளும் கட்சி 'ஈரோடு கிழக்கு' என்ற புதிய ஃபார்முலாவை அறிமுகம் செய்தது. அதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி., அதிமுக உட்படப் பலர் தேர்தலை புறக்கணித்தனர்.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கையில் தொகுதி தேர்தல் பணிகளை ஒப்படைத்தது கட்சித் தலைமை. இந்த முறை யாரும் எதிர்பாராத விதமாக 110556 வாக்குகளைப் பெற்று இளங்கோவன் அமோக வெற்றியைப் பெற்றார். இந்த வெற்றியை முழுமையாக அவராலும் திமுக கூட்டணிக் கட்சிகளாலும் அனுபவிக்க முடியாமல் போய்விட்டது. இளங்கோவனின் திடீர் மறைவை அடுத்து விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற இருக்கின்றது.
இந்த முறையும் திமுக நேரடியாக களத்தில் இறங்கக் கூடும் என சிலர் கருதிய நிலையில் 'ஈரோடு திமுக வசமாகுமா?' என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின், 'திமுக கூட்டணி வசமாகும்' என்று தெரிவித்துள்ளார். ஆக, மீண்டும் காங்கிரஸ்தான் களம் காண இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. ஒருவேளை திமுக இந்த இடைத் தேர்தலில் தனது கட்சி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தால் அது காங். மற்றும் திமுக கூட்டணியில் உரசலை உண்டாக்கும். அது 2026 தேர்தலைப் பாதிக்கும். இந்த ஒரு ஆண்டுகால ஆட்சியில் கூடுதலாக ஒரு எம்.எல்.ஏவை பெறுவதால் திமுகவுக்கு எந்த இலாபமும் கிடைக்கப் போவதில்லை. எனவே தேவையற்ற ரிஸ்க்கை திமுக எடுக்காது.
இந்த இடைத் தேர்தலை அதிமுக நிச்சயம் பழையபடி புறக்கணிக்கவே செய்யும். காரணம், இதில் சறுக்கினால் எடப்பாடியின் தொடர் தோல்வி பட்டியலில் இன்னும் ஒரு தேர்தல் கூடுதலாக இடம்பெறும் என்பதால் அவர் நிச்சயம் போட்டியிலிருந்து விலகிக் கொள்வார். முன்பே அதிமுக, தேமுதிக கூட்டணிக் கட்சிகள் விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் புறக்கணித்தது அறிந்த விசயமே. எனவே 2026 தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் இருக்கும் நிலையில், இந்த ஒரு தொகுதியில் மீண்டும் வாய்ப்பை இழந்து நிற்க அதிமுக தயாராக இல்லை என்பதே கள நிலவரமாக உள்ளது.
விஜய் கட்சி தொடங்கும்போதே அவர் நேராக 2026தான் இலக்கு என்பதை உறுதிசெய்துவிட்டார். அவரது பிளே லிஸ்டில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் இடம்பெறப்போவதில்லை. ஒருவேளை அவர் இந்தத் தேர்தலைச் சந்திக்க நேர்ந்தால் அவருக்குப் பெரிய சறுக்கலை உண்டாக்கிவிடும். காரணம், அவர் திமுகவுக்கு மாற்று தான் தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பல கட்சிகளை 2026க்கு கூட்டணி அழைக்கிறார். அவரது கட்சி இந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு பின்னடைவைச் சந்தித்தால் அது அவரது பிம்பத்தையே சிதைத்து விடும்.

அவரது தொண்டர்கள் மத்தியில் இப்போது உள்ள நம்பிக்கையை அந்த சறுக்கல் இழக்கச் செய்துவிடும். அதை அறியாதவர் அல்ல விஜய். அவர் ஒவ்வொரு காயையும் திமுகவுக்கு எதிராக வலுவாக நகர்த்தத் திட்டமிட்டுச் செயல்படுகிறார். 2026 அவரது தேர்தல் வியூக வகுப்பாளர் யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அப்படியான நிலையில் அவர் நிச்சயம் இந்த இடைத்தேர்தல் மட்டுமல்ல; வரப் போகும் ஒரு ஆண்டுகளில் வேறு ஏதேனும் இடைத் தேர்தல் வந்தாலும் அவர் களம் இறங்க வாய்ப்பு இல்லை.
அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் ஈரோடு கிழக்கைப் புறக்கணித்தால் ஒருவேளை அதை தனக்குச் சாதகமாக மாற்ற அண்ணாமலை நினைக்கலாம். வெற்றி பெறவில்லை என்றாலும் இரண்டாவது இடத்தைப் பிடித்து தங்களது கொங்கு மண்டல வாங்கு வங்கியை நிரூபிக்க சில யுக்திகளை அவர் கையாளலாம். ஒருவேளை கூட்டணிக் கட்சிகளின் சார்பாக விக்கிரவாண்டியைப் போல வேறு ஒரு கட்சிக்கு டம்மியாக வாய்ப்பை பாஜக வழங்கலாம்.
எது எப்படி இருந்தாலும் இடைத் தேர்தல் ஆளும் கட்சிக்குச் சாதகமானது என்ற ஒரு நம்பிக்கையை இந்த ஈரோடு மீண்டும் உறுதிசெய்யும். அதற்கு வசதியாக செந்தில் பாலாஜியும் தற்போது சிறை வாழ்க்கைக்குப் பின் அமைச்சராக வலம் வருகிறார்.ஆக, பல ஃபார்முலாவை ஈரோடு கிழக்கு எதிர்கால அரசியலுக்கு ஒரு புதிய பாதையைப் போட்டுக் காட்டலாம்.












Click it and Unblock the Notifications