நாங்க உதவுறோம்.. விட்ராதீங்க.. எப்போனு காத்திருக்கும் ஸ்டாலின்.. ரரக்களுக்கு அர்ஜுன் சம்பத் அட்வைஸ்!
ஈரோடு: அதிமுகவை முடக்கி மக்களின் மனதில் பதிந்துள்ள இரட்டை இலை சின்னத்தை இல்லாமல் செய்து விட்டால் திமுகவினருக்கு சாதகமாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் என ஈரோட்டில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் பொது கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத், அக்னி பாத் திட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் வந்தே மாதரம் யாத்திரை நடைபெற உள்ளது. வருகின்ற ஜூலை 15ஆம் தேதி வேலூர் கோட்டையில் தொடங்கி, ஆகஸ்ட் 15ஆம் தேதி திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவிடத்தில் முடிவடையும்.
சிக்கலை பாருங்க.. உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?

சுற்றுச்சூழல்
தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பாலும், தண்ணீராலும் 40% மண், ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு, மலடாக கெட்டு போய்விட்டது. ஐநா சபை, சத்குரு வாசுதேவ் ஆகியோருடன் இணைந்து பிரதமர் மோடி மண் காப்போம் திட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இந்தியாவில் உள்ள 16க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மண் காப்பதற்கான சட்டங்களைக் கொண்டு வர உள்ளனர்.

ஓட்டு வங்கி
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் இச்சட்டத்தை கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் இந்துக்களின் ஓட்டு வங்கி உருவாகத் தொடங்கிவிட்டது. பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து கொண்டே உள்ளது. தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்து வருகிறது. தமிழ் பாடத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதுதான் திராவிட இயக்கங்கள் தமிழ் வளர்த்த விதம்.

கல்வித் தரம்
எனவே தமிழகத்தில் கல்வித் தரம் உயர வேண்டுமானால் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தக் கூடிய, புதிய கல்விக் கொள்கையாக, தேசிய கல்வி கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கை வரவேண்டும். தமிழகத்தில் நவோதயா பள்ளிக்கூடங்களை திறக்கப்பட வேண்டும். தமிழகத்தை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும்.

தென் மாவட்டங்கள்
தென்மாவட்டங்களில் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. எனவே தென் மாவட்டங்களை இணைத்து ஒரு மாநிலமும், கொங்கு மண்டலத்தை ஒருங்கிணைத்து ஒரு மாநிலமும், சென்னையை மையமாக வைத்து ஒரு மாநிலமும் உருவாக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். மாநில அரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

திரௌபதி முர்மு
ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும். தமிழகத்தில் லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை பாஜக தலைவர் அண்ணாமலை வெகு சிறப்பாக நடத்தி வருகிறார். அண்ணாமலைக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறோம். தமிழனின் தர்மம்தான் சனாதான தர்மம். சிதம்பரம் கோவிலில் தீக்சிதர்களுக்குத்தான் உரிமை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கிறிஸ்தவர்கள், கனகசபை மீது ஏற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

ஆன்மீகவாதிகள்
கோவிலை ஆன்மீகவாதிகள்தான் நிர்வாகம் செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் வரக்கூடாது. கோவில் நிலங்களை மீட்டதாக சேகர்பாபு விளம்பரத்திற்காக பொய்யான தகவல்களை சொல்கிறார். ஈரோட்டில் பெரிய மாரியம்மன் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடவுள் நம்பிக்கை உள்ளவர் எனவும், அவர் வந்து ஆய்வு செய்து இந்த நிலத்தை மீட்டுக் கொடுப்பாரா எனவும் அமைச்சர் சேகர்பாபுவுக்கு அர்ஜுன் சம்பத் சவால் விடுத்தார்.

எடப்பாடியாருக்குத்தான் ஆதரவு
அதிமுகவில் பெரும்பான்மையோரின் ஆதரவு எடப்பாடியாருக்கு இருப்பது நிரூபணமாகி விட்டது. ஆகவே நிச்சயமாக பன்னீர்செல்வம் விட்டுக் கொடுப்பார். அதிமுக, இரட்டை இலை சின்னம் இரண்டும் இல்லாவிட்டால் வசதி என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அதை அதிமுக தொண்டர்கள் கூடி முறியடிப்பார்கள். நாங்கள் அதற்கு துணை இருப்போம் என்றார் அர்ஜுன் சம்பத்.