ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப்பதிவு! அனுமதியின்றி பிரசாரம் செய்ததால் ஆக்ஷன்
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக நாதக வேட்பாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக, நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 8 பேர் மீதும் BNS-171 பிரிவின் கீழ் ஈரோடு நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக் குறைவால் காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக போட்டியிடுகிறார். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர், வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு பேருந்து நிலையத்தில் இன்று நாதக வேட்பாளர் சீதாலட்சுமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
இந்நிலையில், முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக, நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 8 பேர் மீதும் BNS-171 பிரிவின் கீழ் ஈரோடு நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சீதாலட்சுமி குற்றச்சாட்டு
முன்னதாக, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக நாதக வேட்பாளர் சீதாலட்சுமி குற்றம்சாட்டினார். "எனது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகும், பிரசாரம் செய்வதற்கு அனுமதி தராமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். 5 பேருடன் சென்றுதான் பிரசாரம் செய்ய வேண்டும் என்கின்றனர். அதற்கும் நான் சம்மதித்தேன். ஆனால், இன்று என் பிரசாரத்துக்கு அனுமதி இல்லை என்கின்றனர்.
இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் வேட்பாளரான என்னை பிரசாரம் செய்யவிடாமல் திமுகவினர் தடுக்கின்றனர். அதற்கு காவல்துறையினரும், அதிகாரிகளும் துணை போகின்றனர். இது அராஜகத்தின் உச்சம். எத்தனை வழக்குகள் போட்டாலும் இதை சந்திக்கத் தயாராக உள்ளேன்.” என்றார்.
தேர்தல் அதிகாரி விளக்கம்
நாம் தமிழர் கட்சியினரின் குற்றச்சாட்டிற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா மறுப்பு தெரிவித்துள்ளார். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் இன்றி அனுமதி வழங்கப்படுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
“சுவிதா போர்டல் ஆன்லைன் மூலமாக மட்டுமே பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதில் எத்தனை விண்ணப்பங்கள் வருகின்றன, எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன என்பதை தலைமை தேர்தல் அதிகாரி வரை பார்க்க முடியும். பாரபட்சமாக இதில் செய்ய முடியாது. இவற்றை பார்வையிடுவதற்கான மூன்று பார்வையாளர்கள் இருக்கிறார்கள். விண்ணப்பித்திருந்தால் 24 மணி நேரத்திற்குள் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும், எந்த இடத்திலும் எந்த வேட்பாளரும் அலைகழிக்கப்படவில்லை, விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications