கருணாநிதியின் 8 அடி முழு உருவ சிலை.. ஈரோடு மாவட்டத்தில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
ஈரோடு; நேற்று கோவையில் பல்வேறு நலத்திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் இன்று ஈரோடு மாவட்டத்தில் 8 அடி உயர வெண்கல சிலையை அவர் திறந்து வைத்துள்ளார்.
தொடர்ந்து கொங்கு மாவட்டங்களில் அவர் தனி கவனம் எடுத்து நலத்திடங்கள் மற்றும் பல்வேறு திட்டப் பணிகளை முன்னெடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி கொங்கு மண்டல வாக்குகளை பெறுவதற்கே இவ்வாறு அவர் செயல்படுவதாகவும் அரசியல் கூர்நோக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீப நாட்களாகவே திமுகவினர் கொங்கு மண்டலத்தில் தனது பலத்தை நிரூபிக்க முயன்று வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்திலிருந்துதான் திமுகவுக்கு ஓட்டு சற்று குறைந்தது. இது ஆரம்பத்திலிருந்து திமுகவின் கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. இதற்கிடையில் 2024ல் நாடாளுமன்ற தேர்தல் வேறு வர உள்ள நிலையில் இந்த பகுதிகளை பலப்படுத்தியே ஆக வேண்டும் எனும் நெருக்கடியில் திமுக சிக்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நேற்று கோவை சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈச்சனாரி பகுதியில் ரூ.663 கோடி மதிப்பிலான 768 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல ரூ.271.25 கோடி மதிப்பளவில் 228 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து 1,07,062 பயனாளிகளுக்கு ரூ.588 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த மாவட்ட வரலாற்றிலேயே இத்தனை பேருக்கு ஒரே நேரத்தில் இவ்வாறான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.
இவ்வாறு முதலமைச்சர் தொடங்கி வைத்த பல திட்டங்களில் கோயமுத்தூர் பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உலகளவிலான தொழில் நகரமாக கோவை வளர்ச்சி பெறும் வகையில் கோயமுத்தூர் பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு ரூ.1,810 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் ஈரோடு மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார்.
திருப்பூரில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதியம் கோபிசெட்டிபாளையத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் மதியம் உணவு எடுத்துக்கொண்டு ஓய்வெடுத்த பின்னர் கோபிசெட்டிபாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் படிப்பகத்துடன் கூடிய முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 8 அடி முழு உருவ சிலையை திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications