ஈரோடு அருகே விஏஓ டூ தாசில்தார்.. பட்டாவில் பெயர் சேர்க்க வேண்டியவர்கள்.. சிறைக்கு போனது எப்படி?
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூர் கே.ஏ.எஸ். காலனியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் விவசாயி ஆவார். இவருடைய மனைவி ஜெயா. இவர் பட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் என்பவரை அணுகி உள்ளார். ஆனால் அவர் பட்டாவில் பெயர் சேர்க்க 20 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இந்த விவகாரத்தில் துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை பொறி வைத்து பிடித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பட்டா பெயர் மாற்றம் செய்ய, பட்டாவில் திருத்தம் செய்ய, நிலத்தை அளக்க, வீட்டு வரி ரசிது போட, புதிய மின் இணைப்பு பெறுவதற்கு, பத்திரப்பதிவு செய்ய என வீடு, நிலம் தொடர்பான விவகாரங்களில் ஒரு சில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது பொதுமக்களின் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைதும் செய்கிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்துள்ளது.

பட்டாவில் பெயர்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூர் கே.ஏ.எஸ். காலனியில் வசிப்பவர் ஆசைத்தம்பி. அவருடைய மனைவி பெயர் ஜெயா. ஆசை தம்பி ஜெயா தம்பதி விவசாயிகள் ஆவார். இந்நிலையில் ஜெயா, தனது பட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கலிங்கியம் கிராம நிர்வாக அலுவலரான 33 வயதாகும் சசிகுமார் என்பவரை அணுகினாராம். அதற்கு அவர் பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம்
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயா ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் சென்றார். அங்கு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் நடந்த விவகாரங்களை கூறி புகார் அளித்தார். லஞ்சம் கேட்டதற்கான ஆதாரங்களை கொடுத்தார். இதையடுத்து, அவர் லஞ்சம் கேட்ட சசிகுமாரை பொறி வைத்து பிடிக்க ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயாவிடம் கொடுத்து அனுப்பினார்.
கைதான துணை தாசில்தார்
அதன்படி ஜெயா கோபி அருகே உள்ள கலிங்கியத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு நேற்று சென்று ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை சசிகுமாரிடம் கொடுத்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலகத்தின் வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென உள்ளே நுழைந்து சசிகுமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அப்போது சசிகுமார் கோபி மண்டல துணை தாசில்தார் மணிமேகலை (43) கூறித்தான் ஜெயாவிடம் லஞ்சம் வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து மணிமேகலையையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications