போர்க்களம்.. மாடியில் இருந்து தாக்கிய திமுகவினர்.. ஈரோடு மோதல் குறித்து சீமான் ஆக்ரோஷம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கும், திமுகவினருக்கும் இடையே பயங்கரமான மோதல் ஏற்பட்டது பற்றி சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு: திமுகவினர் மாடியில் இருந்தபடி தாக்குதல் நடத்தினர். எங்களைப் பார்த்து திமுக பயப்படுகுிறது. இதனால் தான் இதுபோன்ற சம்பவங்களை நடத்துகின்றனர்என ஈரோடு தேர்தல் வாக்கு சேகரிப்பில் திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினர்க்கும் ஏற்பட்ட கைகலப்பு குறித்து சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேராவின் காலமான நிலையில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. வரும் 27 ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அணியின் தென்னரசு களமிறங்கி உள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக-நாம் தமிழர் மோதல்
தற்போது தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் நேற்று இரவு ஈரோடு கிழக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் வீரப்பன்சத்திரத்திலிருந்து ஊர்வலமாகச் சென்றார். காவிரி சாலையில் திமுகவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கற்கள் வீச்சு
இதையடுத்து கற்களையும் கட்டைகளையும் வைத்து தாக்கிக் கொண்டதால் பலர் காயமடைந்தனர். நாம் தமிழர் கட்சியில் 7 பேர் காயமடைந்துள்னளர். போலீசார் தடியடி நடத்தினர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் காயமடைந்த போலீசாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சீமான் நலம் விசாரித்தார்.

மாடியில் இருந்து தாக்குதல்
இந்நிலையில் தான் இந்த சம்பவத்துக்கு சீமான் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.‛‛மாடியிலிருந்து திமுகவினர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். தேவையில்லாத நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள். எங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். இளைஞர்களின் ஆதரவு எங்களுக்கு இருப்பதாலும் இதுபோன்ற சம்பவங்களை நடத்துகிறார்கள். எல்லாம் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிந்து தான் நடக்கிறது. ஸ்டாலின் ஈரோட்டில் பிரச்சாரம் செய்யும் போது நான் இருக்கக் கூடாது என்பதற்காக இது போன்ற தாக்குதல் சம்பவம் நடைபெறுகிறது.

களம் என் கையில்
வங்கி கொள்ளையில் கண்காணிப்பு கேமராவில் இருப்பதை பார்த்து தான் குற்றவாளிகளை பிடிக்கிறார்கள். தெருவில் தங்க சங்கிலி, கொலை நடந்தால் கேமராவில் பதிவான காணொலியை சான்றாக எடுத்து விசாரிக்கின்றனர். இந்த தேர்தல் தொடர்பான வீடியோவை ஆதாரமாக எடுக்காமல் உள்ளனர். வரும் 25ம் தேதி வரை பரப்புரை உள்ளது. அதுவரை நான் இங்கு பரப்புரை செய்வேன். களம் என் கையில் உள்ளது. பணம் மட்டும் தான் அவர்களின் கையில் உள்ளது. திமுக 3 ஆயிரம், அதிமுக 2 ஆயிரம் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். இன்னும் வரும் நாட்களில் ஓட்டுக்கான பணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications