பெரியார் மண்ணில் நின்று ஆம்பளையா என்கிறார்.. எடப்பாடி பழனிசாமிக்கு நடுக்கம் வந்துவிட்டது.. கனிமொழி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோல்வி பயம் வந்துவிட்டதாக கனிமொழி கூறியுள்ளார்.
ஈரோடு: பெரியாரின் மண்ணில் நின்று கொண்டு எடப்பாடி பழனிசாமி ஆம்பளையா என்று பேசுவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார். அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் காரணமாக நடுக்கம் வந்துவிட்டதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். நீண்ட போராட்டத்திற்கு பின் இரட்டை இலை சின்னம் தென்னரசுக்கு கிடைத்தது. இவருக்கு ஆதரவாக அதிமுகவினர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனிடையே அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே எடப்பாடி பழனிசாமி நேற்றைய பிரச்சாரத்தின் போது பேசிய வார்த்தைகள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இபிஎஸ் பேசியது என்ன?
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நீ சரியான ஆம்பளையா இருந்தா.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தா.. வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா.. நேரா வெளியே வந்து மக்களை சந்தி. உங்களுக்கு திராணி இல்லை. தெம்பு இல்லை. அதிமுகவை சந்திக்கும் திறமை இல்லை. சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வெளியே வந்து வாக்காளரை சந்தி. அதிமுகவை எதிர்க்கும் சக்தி உனக்கு கிடையாது என்று பேசி இருந்தார்.

கனிமொழி பேச்சு
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரித்தார். அப்போது கனிமொழி பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிச்சயம் திமுக கூட்டணி வெற்றிபெறும். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. இந்த வெற்றி தமிழ்நாட்டின் சுயமரியாதையை தட்டிப்பார்க்க கூடியவர்களுக்கு துணை போகும் நபர்களுக்கு பாடம் கற்பிக்கக்கூடிய வெற்றியாக இருக்கும்.

தாமரையாக இரட்டை இலை
ஆனால் அதிமுகவில் வேட்பாளர் யாரென்று முடிவு செய்வதற்கே காலம் போனது. இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு இல்லை என்று தெரிந்துவிட்டது. இதனால் ஈரோட்டுக்கு பிரச்சாரத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி என்று தெரிந்தவுடன் நடுக்கம் வந்துவிட்டது. அவரை இரண்டு பக்கமும் பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்போதே இரட்டை இலை தாமரை இலையாக மாறிவிட்டது. எதிர்காலத்தை பற்றிய பயத்தால், மைக் கிடைத்துவிட்டது என்று ஏதேதோ பேசியிருக்கிறார்.

பெரியாரின் மண்
வேஷ்டி கட்டுறியா, மீசை இருக்கா, ஆம்பளையா என்கிறார். ஆண்மையின் திமிர் அழிய வேண்டும் என்று சொன்ன பெரியாரின் மண்ணில் நின்று கொண்டு, ஆம்பளையா பொம்பளையா என்று கேட்கிறார். பல ஆண்டுகளாக ஒரு அம்மையாரின் காலில் விழுந்து எழுந்திருக்கிறார். அவர்கள் என்ன மீசை வைத்திருந்தார்களா அல்லது வேஷ்டி கட்டியிருந்தார்களா? பதவி என்று சொன்னவுடன் ஒரு அம்மையாரின் காலில் விழுந்தார். பின்னர் அவர்களின் முதிலேயே குத்தினார். இதுதான் ஆண்மையா? இதுதான் மனிதமா? நீங்கள் வீரம், தைரியம் பற்றி பேசுகிறீர்கள்.

கே.என்.நேருவின் கோபம்
மக்களை யாரும் அழைத்துக் கொண்டு பூட்டவில்லை. மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுடன் திமுகவினர் அமர்ந்திருக்கிறார்கள். இங்கே இருப்பவர்கள் அனைவரும் அமைச்சர்கள். ஆனால் பதவியை இரண்டு நிமிடங்களில் தூக்கிபோட்டுவிடுவார்கள். அமைச்சர் கே.என்.நேருவின் கோபத்தை பற்றி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பலமுறை பேசி இருக்கிறார்.

பொறுமையெல்லாம் ஓரளவு தான்
அந்தக் கோபம் இன்னும் நிற்கவில்லை. பல நேரங்களில் வைரலாக போகிறது. பொறுமை எல்லாம் ஓரளவுக்கு தான். அதேபோல் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் என்பதால், எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் என்று நினைக்காதீர்கள். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் ஈரோடு மாவட்டத்திற்கு எதையும் அதிமுக செய்யவில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications