'ஈரோடு போலீஸ் ஏட்டு நவீன்குமார் வீட்டில்'.. ஜன்னலில் எட்டிப் பார்த்து.. அதிர்ந்து போன காவலர்
ஈரோடு: வேலூர் மாவட்டம் வசந்தநடை பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்பவர் ஈரோடு மாவட்ட ஆயுதப்படை பிரிவு போலீசில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். அண்மையில் தான் திருப்பூர் ஆயுதப்படை பிரிவில் இருந்து ஈரோடு ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட மாற்றம் பெற்று வந்திருந்தார். ஈரோட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த ஏட்டு நவீன்குமார் எடுத்த முடிவு மொத்த குடும்பத்தையும் அதிர வைத்துள்ளது.
போலீசாரை பொறுத்தவரை வேண்டிய நேரத்தில் விடுமுறை எடுப்பது, குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பது என்பது சவாலானதாக உள்ளது. இதனால் பணிச்சுமை அல்லது மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனைகளால் காவல்துறையில் பணியாற்றுவோர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குற்றவாளிகளின் நடவடிக்கைகள், பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளால் ஏற்படும் மன அழுத்தம் போன்ற பல்வேறு சிக்கல்களால் போலீசார் சிலருக்கு மன அழுத்தம் அதிகமாகி விடுகிறது.

அதேபோல் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் திடீரென தவறான முடிவெடுக்கிறார்கள். அப்படித்தான் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ஈரோட்டில் தவறான முடிவெடுத்துள்ளார். என்ன நடந்தது என்று பார்ப்போம்.
வேலூர் மாவட்டம் வசந்தநடை பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவருடைய மகன் நவீன் குமாருக்கு 36 வயது ஆகிறது. இவர் ஈரோடு மாவட்ட ஆயுதப்படை பிரிவு போலீசில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். நவீன் குமார் அண்மையில் தான் திருப்பூர் ஆயுதப்படை பிரிவில் இருந்து ஈரோடு ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட மாற்றம் கேட்டு வாங்கி வந்துள்ளார்.
ஏட்டு நவீன் குமாருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை பணி முடிந்து ஈரோடு ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு நவீன்குமார் வந்து உள்ளார். அவருடைய மனைவியும், மகனும் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்கள். இதனால் ஏட்டு நவீன்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நவீன்குமாரை அவருடைய தந்தை நடராஜன் செல்போனில் அழைத்திருக்கிறார். ஆனால் நீண்ட நேரம் அழைத்தும் செல்போன் எடுக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், உடனே ஈரோடு ஆயுதப்படை அலுவலக பிரிவுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் ஆயுதப்படை காவலர் ஒருவர், நவீன்குமார் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று கதவை தட்டி உள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது நவீன்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு ஆடிப்போனார்.
இதுகுறித்த அவர் போலீசுக்கு தகவல் தந்தார். அதன்பேரில், ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் தூக்கு போட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை காரணமாக நவீன்குமார் உயிரை விட்டாரா அல்லது பணிச்சுமை காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோடு மாநகர காவல்துறையினர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications