"அங்கிருந்து" செட்அப் பண்ணி எல்லாம் பேசக்கூடாது.! பிரஸ் மீட்டில் டென்ஷனான செங்கோட்டையன்.. பரபரப்பு
ஈரோடு: இன்று கோபியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் பல முக்கிய கருத்துகளைக் கூறினார். அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சொன்ன அவர், தனது நிபந்தனைகளை விளக்கினார். அப்போது அங்கிருந்த ஒருவர், செங்கோட்டையனை பேச விடாமல் தொந்தரவு செய்ததால் அவர் பிரஸ் மீட்டிலேயே கடுகடுத்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில காலமாகவே எடப்பாடியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை செங்கோட்டையன் புறக்கணித்து வந்தார். மேலும், எடப்பாடி குறித்த கேள்விகளுக்கும் பதிலளிப்பதைத் தவிர்த்து வந்தார். இதற்கிடையே இன்று தனது மனதில் பட்டத்தை வெளிப்படையாகப் பேசப்போவதாக செங்கோட்டையன் கூறியிருந்தார்.

செங்கோட்டையன்
முன்னதாக இன்று கோபியில் ரோட்ஷோ போலத் திறந்த வாகனத்தில் வலம் வந்த செங்கோட்டையன் தொண்டர்களைச் சந்தித்தார். அதிமுக கட்சி அலுவலகத்தைச் சுற்றி பெருந்திரளான தொண்டர்கள் சூழ்ந்து இருந்தனர். திறந்த வாகனத்தில் இருந்தபடி அவர்களை செங்கோட்டையன் சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் பல முக்கிய கருத்துகளைக் கூறினார். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை உடனடியாகச் சேர்க்க வேண்டும் எனச் சொன்ன செங்கோட்டையன் இதற்கு 10 நாட்கள் கெடு விதித்தார். தொடர்ந்து அவர் பல முக்கிய கருத்துகளைக் கூறினார்.
அதிமுக அரசியல்
அப்போது செய்தியாளர் ஒருவர், அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் ஆகும் திட்டமா என்று கேள்வி எழுப்பினார். அதுபோல எந்தவொரு திட்டமும் இல்லை எனக் குறிப்பிட்ட செங்கோட்டையன், அதிமுகவுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பாகத் தெரிவித்தார். மேலும், தனது நிபந்தனைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்ற அவர், அப்படி நிறைவேற்றவில்லை என்றால் இந்த மனநிலையில் இருப்போரை ஒருங்கிணைப்பேன் என்றும் அதன் பிறகு பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க முயல்வேன் என்றும் கூறினார்.
கடுகடுத்த செங்கோட்டையன்
செங்கோட்டையன் இந்தப் பதிலைச் சொல்லிக் கொண்டு இருந்தபோது, சிலர் அவரை தொடர்ந்து இடைமறித்தனர். அவரை பேச விடாமல் கேள்விகளைக் கேட்க முயன்றனர். தொடக்கத்தில் பொறுமையாக இருந்த செங்கோட்டையன் ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகிவிட்டார். "தம்பி, கொஞ்சம் இருங்க.. அங்கிருந்து செட்அப் பண்ணி எல்லாம் பேசக்கூடாது. கொஞ்சம் அமைதியாக இருங்கள்.. பேசி முடிக்கிறேன்" எனக் கடுகடுத்தார். அதன் பிறகே சற்று அமைதி ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், "எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருடன் இணைந்து தலைமை மீது ஆளுநரிடம் ஊழல் குற்றச்சாட்டு கொடுத்தார் எஸ்டிஎஸ்.. இருந்த போதிலும் அவரையே மன்னித்து, மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்ற அழைத்தவர் எம்ஜிஆர். இப்போது வெளியேறியவர்கள் அப்படி எதுவும் செய்தார்களா? ஆளுநரை எதாவது சந்தித்தனரா" என்று அவர் கேள்வி எழுப்பினார்..
ஏன் முக்கியம்
அதிமுகவில் இப்போது உட்கட்சி விவகாரம் மீண்டும் வெடிக்கும் சூழல் உருவாக்கியுள்ள நிலையில் செங்கோட்டையன் கூறிய இந்தக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்றும் அப்போது தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்றும் செங்கோட்டையன் கூறினார். மேலும், 2024 தேர்தலுக்கு பிறகே இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியதாகவும் இருப்பினும் அவர் அதை ஏற்கும் மனநிலையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications