50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்போம்.. களத்தை 'அப்படி' வச்சிருக்கோம்.. கேபி முனுசாமி பரபர!
அதிமுகவை பொறுத்தவரையில் தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த கட்சியும் இல்லை என கேபி முனுசாமி கூறியுள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதற்கேற்ற வகையில் களத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என ஆளும்கட்சியினர் சொல்கின்றனர். உண்மையில் அதிமுகவை பொறுத்தவரையில் தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த கட்சியும் இல்லை என கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு பிறகு, அதிமுகவினர் பரபரப்படைந்த நிலையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினருமே போட்டியிடுவதாக தெரிவித்திருந்தனர்.

ஈபிஎஸ் அணி வேட்பாளர்
எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கனவே அதிமுகவோடு கூட்டணியில் இருந்த தமாகா தவிர மற்ற கட்சிகள் ஆதரவு தராத நிலையில், பாஜக இந்த தேர்தலில் என்ன நிலைப்பாடு என்று வெளிப்படையாகக் கூறாமல் இருந்து வருகிறது. இதற்கிடையே தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை அறிவித்தது எடப்பாடி பழனிசாமி தரப்பு. வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்ச்சி நேற்று ஈரோட்டில் நடைபெற்றது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி, "கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என ஆளும்கட்சியினர் சொல்கின்றனர். உண்மையில் அதிமுகவை பொறுத்தவரையில் தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த கட்சியும் இல்லை. கிளை கழகச் செயலாளராக இருந்து படிப்படியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி.

50 ஆயிரம் வாக்குகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதற்கேற்ற வகையில் அதிமுக நண்பர்கள் களத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஈரோடு அதிமுகவில் உள்ள திறமை மிக்க தொண்டர்களும் நிர்வாகிகளும் இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். இங்கே நம்மை எதிர்ப்பதற்கு ஆள் இல்லை." எனத் தெரிவித்தார்.

ஆளுங்கட்சி கூட்டணி
நாங்களும் தேடித் தேடிப் பார்க்கிறோம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், எங்களுடைய எதிர் தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணப்படவே இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருந்தார். அதேபோல, விசிக தலைவர் திருமாவளவனும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை திமுக கூட்டணிக்கு எதிரிகளே இல்லை எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் கே.பி.முனுசாமி.

செங்கோட்டையன்
முன்னதாக, முன்னாள் அமைச்சரும் தேர்தல் பணிக்குழு தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், காலத்தை வென்றவன் நீ, காவியத்தை வென்றவன் நீ, என்ற பாடலை குறிக்கோளாகக் கொண்டு இந்த இடைத்தேர்தலில் வெற்றி காண்போம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் நான்கரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி நடத்தி அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை ஒளிரச் செய்த எடப்பாடியார் தலைமையில் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications