கூவும் குக்கர், பளிச் டார்ச்.. ரெடியான 77 வேட்பாளர்கள்.. இடைத்தேர்தல் பாதுகாப்பு குறித்த மேஜர் தகவல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாதுகாப்பு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விரைவில் நடக்கபோகிறது.. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடந்தது.
இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கேஎஸ் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் சிவபிரசாந்த் உள்பட 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

பரிசீலனை
இதையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்றுமுன்தினம் நடந்தது.. இதில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக உள்ளிட்ட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன..இதில் ஓபிஎஸ். அணி வேட்பாளர் உள்பட 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.. இதனிடையே, வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவு பெறப்பட்டது. பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நோட்டா சின்னம்
அதாவது, மொத்தம் 77 வேட்பாளர்கள் + நோட்டா என 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியது உள்ளது... ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கீட்டின் அடிப்படையில், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் சூழலும் தற்போது ஏற்பட்டுள்ளது. மேலும், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு 'கை' சின்னமும் தென்னரசுவுக்கு 'இரட்டை இலை' சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. அதேபோல, தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு 'முரசு' சின்னம் ஒதுக்கீடு. டார்ச் லைட், குக்கர் சின்னங்கள் சுயேட்சைகளுக்கான சின்னம் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

விஜயகாந்த் முரசு
இவ்வாறாக சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இடைத்தேர்தலுக்கான பரபரப்பு துவங்கி உள்ளது.. பிரச்சாரத்தையும் அந்தந்த கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.. ஏற்கெனவே பாதுகாப்பு பணிக்கு 2 கம்பெனி துணை ராணுவப் படையை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நிலையில், மேலும், கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்ப முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ சொன்னதாவது:

செக்போஸ்ட்
"பணப்பட்டுவாடா குறித்து புகார்கள் வந்ததை தொடர்ந்து, 6 பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை அந்த தொகுதியில் ரூ.25.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. வாகன சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. சோதனை சாவடிகள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா குறித்து புகார் வந்தால், உடனடியாக அந்த இடத்துக்கு செல்ல பறக்கும் படையினர் தயார் நிலையில் உள்ளனர். ஏற்கெனவே பாதுகாப்பு பணிக்கு 2 கம்பெனி துணை ராணுவப் படையை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நிலையில், மேலும், கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்ப முடிவெடுத்து தகவல் தெரிவித்துள்ளது...

துணை ராணுவம் வருகை
இப்படி மொத்தம் ஐந்து கம்பெனி துணை ராணுவ வீரர்களை, பாதுகாப்புக்கு அனுப்ப, தேர்தல் கமிஷன் ஒப்புதல் வழங்கி உள்ளது.. இரண்டு கம்பெனி துணை ராணுவ வீரர்கள், நாளை ஈரோடு வருகிறார்கள்.. மீதமுள்ள மூன்று கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஓரிரு நாளில் வருவார்கள்.. ஒரு கம்பெனியில் 100 முதல் 120 வீரர்கள் இருப்பார்கள்.. இவர்கள் பதற்றம் அதிகம் உள்ள பகுதிகளில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.. பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவுடனும் செல்வார்கள்.. அதிமுக சார்பில் 5 வாக்குச்சாவடிகளை குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.. அந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் அனைத்தும் சரியாகவே இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications