கடுகடுத்த எடப்பாடி.. இவ்வளவு கோபமா? ஆளே மாறிட்டாரே.. ஈரோட்டில் மாறிய டோன்.. கவனிச்சீங்களா?
அதிமுக நிர்வாகிகள் பெரிதாக களப்பணிகளை செய்யாத நிலையில் எடப்பாடி பழனிசாமி நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தனது டோனை அப்படியே மாற்றி இருக்கிறார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 27ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி
இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஈரோடு கிழக்கில் அதிமுக சார்பாக தேர்தல் பணிகளை கவனிக்க, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளடக்கிய 117 பேர் கொண்ட மிகப்பெரிய தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் எடப்பாடி. . செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.

பெரிய படை
மேலும், தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, உடுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், என்று மொத்தமாக மாஜின் அமைச்சர்களின் படை இங்கே மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளது. ஆனால் இவர்கள் பெரிதாக களப்பணிகளை செய்யாத நிலையில் எடப்பாடி பழனிசாமி நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று இங்கே பிரச்சாரம் செய்த இவர் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

பிரச்சாரம்
நேற்று பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 21 மாதமாக மக்களை அமைச்சர்கள் சந்திக்கவே இல்லை. ஆனால் இப்போது தேர்தல் என்றதும் மக்களை சந்திக்கிறார்கள். நான் இப்போது மக்களை சந்திப்பது போல முதல்வருக்கு மக்களை சந்திக்க நேரம் இருக்கிறதா? அவர் ஏன் வெளியே வருவதே இல்லை. தேர்தலுக்கு முன் வந்தாரே? வெற்றிபெற்ற பின் ஏன் அவர் மக்களை சந்திப்பதே இல்லை. 21 மாதமாக வெளியே வராத அமைச்சர்கள் இப்போது டீ போடுவது, வடை சுடுவது என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு திமுக செய்தது என்ன? அவர்கள் செய்த நலத்திட்டங்கள் என்ன ? சொல்லுங்கள் பார்க்கலாம்? ஒரு அமைச்சராவது இங்கே அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை சொல்ல முடியுமா? மக்கள் அதிமுக பக்கம் இருக்கிறார்கள். மக்களுக்கு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை சொல்லிவிட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த திமுக என்ன செய்தது வீட்டு வரியை, கடை வரியை உயர்த்தியது. மின்சார கட்டணத்தை உயர்த்தியது. தாங்கள் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு திமுக கொடுத்த பரிசு இதுதான் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

டோன்
இந்த பிரச்சாரம் முழுக்கவே எடப்பாடி பழனிசாமி மிகவும் கடுகடுப்புடன் இருந்தார். அவரின் பேச்சில் கோபம் இருந்தது. மிகவும் கோபமாக பேசிய அவர்.. இடையே இடையே சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி முதல்வரை விமர்சனம் செய்தார். அதோடு ஒருமுறையில் குறிப்பிட்டும் சில கேள்விகளை எழுப்பினார். எடப்பாடி பழனிசாமி நேற்று தனது பிரச்சாரத்தில் மொத்தமாக டோனை மாற்றிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். தான் திமுகவை கடுமையாக எதிர்க்கிறேன் என்று அதிமுக தொண்டர்கள் இடையே பிரகடனம் செய்யும் விதமாக எடப்பாடியின் நேற்றைய காட்டமான பிரச்சாரம் அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications