ஈரோடு கிழக்கு தேர்தல்..யாருமே யோசிக்காத 'ஷெட்'- புது வியூகமாக இருக்கே.. குமுறலில் எதிர்க்கட்சிகள்!
ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுக அணியின் ஷெட் வியூகத்தால் எதிர்க்கட்சிகள் குமுறி வருகின்றன.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத புது பார்முலாவை திமுக கூட்டணி கடைபிடிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குமுறலை கொட்டி வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் பட்டாளமே களமிறங்கி உள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து திமுக நிர்வாகிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியின் ஒவ்வொரு வீட்டையும் இலக்கு வைத்து திமுக கூட்டணியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசாரத்தின் போது மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவராக எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசி வாக்கு சேகரித்தார். அப்போது மக்களை ஷெட்டுகளில் அடைத்து வைத்துள்ளது திமுக கூட்டணி என புதிய குற்றச்சாட்டை கூறினார்.
இது தொடர்பாக நாம் விசாரித்த போது, பொதுவாக ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியும் வியூகங்கள் வகுத்து செயல்படுவது வழக்கம். ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரையில் திமுக தொடக்கம் முதலே படுதீவிரமாக களப்பணி செய்து வருகிறது. தேர்தல் ஆணையமானது தேதி அறிவித்த மறுநாளே அமைச்சர்கள் முத்துசாமி, நேரு உள்ளிட்டோர் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தனர். இந்த பிரசாரத்துக்கு 3 நாட்கள் பின்னர்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி தமது வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனை நிறுத்தியது.
பொதுவாக கூட்டணி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டால் பிரதான கட்சி ஒரு குறிப்பிட்ட பங்களிப்பைத்தான் செய்யும். ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் நிற்பதைப் போன்ற உணர்வுடன் திமுகவினர் பம்பரமாக களப்பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள திமுக நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒரு வீடு விடாமல் வாக்கு சேகரிக்கின்றனர்.
அதேநேரத்தில் சில இடங்களில் திமுக கூட்டணியில் வாக்காளர்களை கவருவதற்காக ஷெட் போல அமைத்து அங்கே சினிமா உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். சில இடங்களில் 3 வேளை உணவும் கூட வழங்கப்படுகிறதாம். இதனால் பொதுமக்கள் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரசார கூட்டங்களுக்கு செல்லாமல் இந்த ஷெட்களிலேயே இருந்து விடுகின்றனராம். இதனைத்தான் எடப்பாடி பழனிசாமி ஆவேச்சப்பட்டு ஷெட்டுக்குள் மக்களை அடைத்து வைத்துவிட்டனர் என குமுறி இருக்கிறார்.
ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியும் வியூகம் வகுத்துதான் செயல்படும். அதேபோல ஒரு வியூகம்தான் இந்த ஷெட் விவகாரமும் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications