ஈரோடு கிழக்கு தொகுதி: காங்கிரஸ் தான் வெற்றி பெறும்.. அதிமுகவிற்கு வாய்ப்பு இல்லை.. திருமாவளவன்
தூத்துக்குடி: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள திருமாவளவன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற கூட்டணி கட்சிகளுடன் வலுவாக பாடுபடுவோம் என்றார். மேலும் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது.
1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி ஒரு தொகுதி காலியானால் அடுத்த 6 மாதங்களுக்குள் அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி ஏற்கனவே காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றதால் எதிபார்த்தது போலவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. இரட்டை இலை சின்னத்தில்தான் இந்த தொகுதியில் போட்டியிட்டு இருந்தது. இதனால், அந்தக் கட்சியே மீண்டும் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக விரும்பியதால் அந்தக் கட்சியே போட்டியிட இருப்பதாக ஜிகே வாசன் இன்று அறிவித்தார்.

இரட்டை இலை சின்னம்
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதேபோல் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. சின்னத்திற்கு அதிமுகவின் இரு அணிகளும் உரிமை கோரினால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

திருமாவளவன் பேட்டி
இவ்வாறாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன் கூறியதாவது:-

இரட்டை குவளை முறை அதிகமாக உள்ளது
வேங்கைவயல் பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சிபிசிஐடி விசாரணையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க கியூ பிரிவு போல தனி உளவுப் பிரிவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன். இரட்டை குவளை முறை அதிகமாக உள்ளது. எனவே இதனை ஒழிக்க சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

ராமர் பாலம் இல்லை
ஆதி திராவிட மக்களுக்கு தாட்கோ கடன்கள் கொடுப்பதற்கு தேசிய வங்கிகள் முன்வராத நிலை தமிழகத்தில் இருக்கிறது. ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அது ராமர் பாலம் இல்லை என்று சொன்ன மத்திய அரசு தற்போது இப்படி சொல்வது அதிர்ச்சியளிக்கிறது. சேது சமுத்திர திட்டத்தில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு பரிசீலிக்க வேண்டும். ஸ்ட்ரெலைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். காங்கிரஸ் வெற்றி பெற கூட்டணி கட்சிகள் பாடுபடுவோம். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது இயலாத ஒன்றாகும். அந்தக் கட்சி சினத்தினை இழந்து நிற்பதோடு 2 பிரிவுகளாக இருக்கிறது. எனவே வெற்றி பெறுவது கடினம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications