கண்ணாமூச்சி ஆட்டத்தை கார் கவருக்குள் ஆடிய 3 வயது சஞ்சீவி.. தானாக லாக் ஆன கதவு.. கரூரில் விபரீதம்
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விளையாடச் சென்ற 4 வயது சிறுவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் உள்ளே சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கழுகூர் கிராமத்தில் கார் கவருக்குள் எதிர்பாராத விதமாக சிக்கிய சிறுவன் சஞ்சீவி காருக்குள்ளேயே துடிதுடித்து உயிரிழந்தது அந்தப் பகுதியையே நிலைகுலைய வைத்துள்ளது.. தற்போது தோகைமலை போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழுகூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு.. 36 வயதான இவர் கட்டிட வேலை அதாவது கொத்தனார் வேலை செய்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் மாரிஸ்வரி.. 30 வயதான இவர் கட்டிட வேலையில் சித்தாள் பணியில் இருந்து வருகிறார்.

கரூர் காரில் சிறுவன்
இந்த தம்பதிக்கு சஞ்சீவி என்ற 3 வயது மகன் இருந்தார்.. நேற்று காலை 9 மணி அளவில் சஞ்சீவி தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தான்.. அப்போது அங்கு ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது.. அந்த காருக்கு முழுமையாக கவர் போடப்பட்டிருந்துது..
விளையாடிக் கொண்டிருந்த சஞ்சீவி, திடீரென கார் கவருக்குள் புகுந்து விட்டான்.. யாருக்கும் தெரியாமல் காரின் கதவையும் திறந்து உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டான்.. சிறுவன் உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே எதிர்பாராத விதமாக காரின் கதவுகள் தானாக பூட்டிக் கொண்டன.
மூடப்பட்ட காரின் கவர்
காரின் மேல் தடிமனான பிளாஸ்டிக் கவர் போர்த்தப்பட்டிருந்ததால், உள்ளே இருந்த சிறுவனால் கதவை மீண்டும் திறக்க முடியவில்லை.. அதுமட்டுமில்லாமல், கார் கவர் முழுமையாக மூடியிருந்ததால் காருக்குள் காற்றோட்டமின்றி ஆக்சிஜன் அளவு வேகமாகக் குறைந்தது.. போதிய காற்று கிடைக்காமல் காருக்குள்ளேயே அந்த பிஞ்சு உயிர் தவித்துள்ளது..
வெளியே விளையாடிக்கொண்டிருந்த மற்ற சிறுவர்கள், சஞ்சீவி எங்கே போனான் என்பதையும் கவனிக்கவில்லை.. நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் பதறிப்போன வேலு மற்றும் மாரிஸ்வரி அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர்.. எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரமானது.. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஒட்டுமொத்த கிராமமே சல்லடை போட்டுத் தேடியும் சஞ்சீவி கிடைக்கவில்லை..
குளித்தலை சிறுவன் பரிதாபம்
இறுதியில், சந்தேகத்தின் பேரில் வீட்டின் அருகே கவர் போட்டு மூடப்பட்டிருந்த காரை சோதித்தனர்.. காரின் கவரை வேகவேகமாக விலக்கிவிட்டு ஜன்னல் கண்ணாடி வழியாகப் பார்த்தபோது, சஞ்சீவி காருக்குள் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு பெற்றோர் கதறித் துடித்தனர்.
உடனடியாகக் காரின் கதவைத் திறந்து சிறுவனை மீட்ட பெற்றோர், அவரை குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.. அங்கு சிறுவனைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டனர்.
போஸ்ட் மார்ட்டம்
இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து கழுகூர் கிராமமே சோகத்தில் மூழ்கியது.. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தோகைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனின் உடலைக் கைப்பற்றினர்.. தற்போது சிறுவனின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது..
இச்சம்பவம் குறித்து தோகை மலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன் கண் முன்னே விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை பிணமாக மீட்கப்பட்ட இந்த துயரச் சம்பவம் கரூர் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.., மருத்துவமனையில் இருந்த 3 வயது சிறுவனின் பெற்றோர், உறவினர்கள், திரண்டிருந்த கிராமத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications