விஜய்யின் வேளாங்கண்ணி, நாகூர் தர்காவுக்கான பயணம் ரத்து? கருத்துக் கணிப்புதான் காரணமா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய், இன்று (மே 2) நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்கா ஆகிய இடங்களுக்கு செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் இந்தத் திடீர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் களத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
மே 4 ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் கோயில் கோயிலாக சென்று வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யும் வேளாங்கண்ணி, நாகூர் தர்காவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

இன்று அதிகாலை அவர் வேளாங்கண்ணியில் தரிசனம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ரத்துக்கான காரணங்கள் விஜய் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், பயண ரத்திற்குப் பின்னால் உள்ள சில முக்கிய காரணங்களை பார்க்கலாம்.
பாதுகாப்பு மற்றும் நெரிசல்: தமிழகத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களான வேளாங்கண்ணி மற்றும் நாகூரில், விஜய்யின் வருகையை அறிந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரள வாய்ப்புள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறையும், கூட்ட நெரிசலையும் ஏற்படுத்தும் என்பதால் பாதுகாப்பு கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பரபரப்பு: இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், த.வெ.க தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தச் சூழலில் பொது இடங்களுக்குச் செல்வது தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
தொடரும் ஆன்மிகப் பயணம்: திருச்செந்தூர் முதல் ஷீரடி வரை
சமீபகாலமாக விஜய் தீவிரமான ஆன்மிகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். கட்சியின் வெற்றிக்கும், மன அமைதிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர் மேற்கொண்ட முந்தைய பயணங்களை பார்க்கலாம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்: சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் சென்ற விஜய், அதிகாலையில் விஸ்வரூப தரிசனத்தில் முருகப்பெருமானை தரிசித்தார். கட்சிப் பணிகளுக்கு இடையே அவர் மேற்கொண்ட இந்த விசிட், அவரது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. அங்கு அவருக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஷீரடி சாய்பாபா கோவில்: மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய் பாபா கோவிலுக்கும் விஜய் சமீபத்தில் சென்று திரும்பினார். மிக ரகசியமாகவும், எளிமையாகவும் திட்டமிடப்பட்ட இந்த ஷீரடி பயணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
தமிழக வெற்றிக் கழகம் தேர்தலைச் சந்தித்த பிறகு, அதன் முடிவுகள் ஜூன் 4-க்கு பதிலாக மே 4 அன்று வெளியாவதாக அரசியல் வட்டாரங்கள் மற்றும் நிர்வாக ரீதியிலான எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. இந்த முக்கிய தருணத்தில் விஜய்யின் அடுத்தகட்ட நகர்வுகள் உற்று நோக்கப்படுகின்றன.
தமிழக தேர்தலுக்கான பிரச்சார பயணங்களை அவ்வப்போது ரத்து செய்து வந்தார் விஜய். ஒரு நாள் பிரச்சாரம் செய்தால், அடுத்த நாள் வரும் பிரச்சாரத்தை ரத்து செய்த வண்ணம் இருந்தார். இவரது வருகைக்காக பொதுமக்கள் காத்திருந்த நிலையிலும் விஜய் அது போல் ரத்து செய்திருந்தார்.
போலீஸ் அனுமதி கொடுக்காவிட்டால் தமிழக அரசை பக்கம் பக்கமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்த அவர், போலீஸ் அனுமதி கிடைக்கும் பல்வேறு பிரச்சாரங்களை ரத்து செய்தது ஏன் என்பதை அவர் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.
அது போல் தற்போது இந்த ஆன்மீக பயணத்தையும் விஜய் ரத்து செய்துள்ளார் என்றே கூறப்படுகிறது. கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணியே வெல்லும் என கூறியிருந்தாலும் விஜய்க்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத வகையில் வந்த கணிப்புகளால் அவர் அதிர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications