நம்ம ஏரியாவுக்கு பக்கத்துலேயே இப்படியா? எடப்பாடிக்கு எகிறி அடித்த பிரஷர்.. 4 பக்கமும் வரும் அம்புகள்
தொகுதி குறித்து எடப்பாடிக்கு ஏ டூ இசட் எல்லாம் தெரிந்தும் கூட இவ்வளவு பெரிய தோல்வியை அவர் சந்தித்து இருக்கிறார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது எடப்பாடிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. அதிமுக வேட்பாளரின் படுதோல்வியால் எடப்பாடி பழனிசாமிக்கு 4 விதமான அழுத்தங்கள் கொடுக்கப்படலாம் என்று அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. கடந்த 27ம் தேதி தேர்தல் நடந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கே திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து அதிமுக சார்பாக கேஎஸ் தென்னரசு போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் போட்டியிட்டார். தேமுதிக சார்பாக ஆனந்த் இங்கே வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

வெற்றி
ஈரோடு கிழக்கில் இதுவரை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளார். 1,10,556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 43,981 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். நாம் தமிழர் கட்சி 8474 வாக்குகளை பெற்று மூன்றாம் இடம் பிடித்தது. தேமுதிக வெறும் 1177 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது. இதனால் திமுக தரப்பு பிரம்மாண்ட வெற்றியை இங்கே பதிவு செய்துள்ளது. நாம் தமிழர் டெபாசிட் இழந்துள்ளது. தேமுதிக டெபாசிட் இழந்து உள்ளது.

படுதோல்வி
இங்கே அதிமுக தோல்வி அடைய வாய்ப்பு உள்ளதாகவே அரசியல் வல்லுனர்கள் பலரும் கணித்து இருந்தனர். ஆனால் கணிப்பை மீறி அதிமுக இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது. 66575 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்து உள்ளது. இதில் காங்கிரஸ் 64.6% வாக்குகளை வென்றுள்ளது. அதிமுக வெறும் 25.75% வாக்குகளை மட்டுமே வென்றுள்ளது. ஈரோடு கிழக்கில் கடந்த முறை நடத்த தேர்தலில் காங்கிரஸ் - திருமகன் ஈவெரா- 67,300 வாக்குகள் - 44.27 வாக்கு சதவிகிதம் பெற்றார். அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் - யுவராஜா எம்.- 58,396 வாக்குகள் - 38.41 வாக்கு சதவிகிதம் பெற்றார். நாம் தமிழர் - கோமதி - 11,629 வாக்குகள் - 7.65 வாக்கு சதவிகிதம் பெற்றார். மக்கள் நீதி மய்யம் - ராஜ் குமார் - 10,005 வாக்குகள் - 6.58 வாக்கு சதவிகிதம் பெற்றார். ஆனால் இந்த முறை அந்த வாக்குகளை கூட அதிமுக பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது

சரிவு
அதாவது 38.41 வாக்கு சதவிகிதத்தில் இருந்து 25.75% வாக்குகள் என்ற நிலைக்கு அதிமுக சென்றுள்ளது. அதிமுக எதிர்பார்த்ததை விட மோசமான தோல்வியை இதில் பதிவு செய்துள்ளது. திமுக காசு கொடுத்தது என்று அதிமுக விமர்சனம் வைத்தாலும், வாக்குகள் வேறுபாட்டை பார்க்கையில் அதிமுகவை ஈரோடு மக்களே பெரிய அளவில் புறக்கணித்து உள்ளனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக தெரிகிறது. அதோடு இது எடப்பாடியின் வீட்டிற்கு அருகே.. அதாவது சேலத்திற்கு அருகேயிலேயே இருக்கும் ஈரோடு கிழக்கில் நடந்து உள்ளது. இந்த தொகுதி குறித்து எடப்பாடிக்கு ஏ டூ இசட் எல்லாம் தெரிந்தும் கூட இவ்வளவு பெரிய தோல்வியை அவர் சந்தித்து இருக்கிறார்.

சிக்கல்
எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தோல்வி காரணமாக 4 விதமான பிரஷர்கள் ஏற்பட்டு உள்ளன. முதல் பிரஷர் ஓ பன்னீர்செல்வத்தை சமாளிப்பது. இந்த தோல்விக்கு ஒற்றை தலைமைதான் காரணம் என்று ஓபிஎஸ் இனி வாதம் வைப்பார். அதை சமாளிக்க வேண்டும். ஏற்கனவே பண்ட்ருட்டி ராமசந்திரன் இதை சொல்ல தொடங்கிவிட்டார். இரண்டாவதாக ஒற்றை தலைமைக்கு எதிராக பாஜக கருத்து சொல்ல தொடங்கி உள்ளது. அண்ணாமலை நேற்று இதே கருத்தை சொன்னார். பாஜகவின் இந்த பிரஷரை சமாளிக்க வேண்டும் என்ற நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டு உள்ளது.

மற்ற விஷயம்
3வதாக தொண்டர்களை சமாளிக்க வேண்டும். எடப்பாடி மேலே வந்த பின் வரிசையாக எல்லா தேர்தலிலும் எடப்பாடி தோல்வி அடைந்துவிட்டார். அதிமுகவின் படுதோல்விக்கு காரணமாக எடப்பாடி முக்கிய காரணமாக அமைந்து விட்டார். இதனால் அதிர்ச்சியில் இருக்கும் தொண்டர்களையும் சமாதானம் செய்ய வேண்டும். நான்காவதாக எடப்பாடி பழனிசாமி கட்சியில் அதிருப்தியில் இருக்கும் மாஜிக்களை சமாளிக்க வேண்டும். இந்த தோல்வி காரணமாக மாஜிக்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தோல்வியை எடப்பாடி எப்படி சமாளிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications