ஈரோட்டில் கால்பந்து விளையாடிய வீரர்! திடீரென சுருண்டு விழுந்து பலி! மருத்துவர்கள் சொல்லும் காரணம்
ஈரோடு: ஈரோடு அருகே கால்பந்து வீரர் மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. பத்திர எழுத்தாளரான இவர் சிறந்த கால்பந்து வீரர் ஆவார். சங்குநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் தினமும் கால்பந்து பயிற்சி மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இவர் புதன்கிழமை காலை வழக்கம் போல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சக வீரர்கள் அவரை உடனடியாக ஈரோடு அரது தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சுப்பிரமணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 45 வயதான சுப்பிரமணியின் உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை இதய பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து நேரில் பார்த்தவர் கூறுகையில் நாங்கள் நேற்று டோர்னமென்ட் விளையாடினோம். அவரை 9 மணிக்கு பார்த்தேன் எந்த பிரச்சினையும் இல்லை. நான் வஉசி மைதானத்தில் வாக்கிங்கிற்காக சென்றுவிட்டேன். அப்போதுதான் சுப்பிரமணி மயங்கி விழுந்ததை மற்ற நண்பர்கள் எனக்கு போன் செய்து கூறினர். அதன்பேரில் நான் வந்தேன்.
அப்போது மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்றார்கள். நான் என்ன காரணம் என கேட்ட போது மாரடைப்பால் அவர் இறந்ததாக தெரிவித்தனர். நெஞ்சில் வலியே இல்லாமல் சைலண்ட்டாக வரும் ஹாட் அட்டாக் மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சைலண்ட் அட்டாக் என்றால் என்ன: சுப்பிரமணிக்கு வலி ஏதும் இல்லாமல் திடீரென மயங்கி விழுந்ததால் அவருக்கு சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாக தெரிகிறது. சைலண்ட் மாரடைப்பு என்றால் என்ன? அறிகுறிகளே இல்லாமல் அமைதியாக வந்து ஆளை கொல்லும் மாரடைப்புதான் சைலண்ட் மாரடைப்பு ஆகும். இது சாதாரணமாக வரும் மாரடைப்பை காட்டிலும் மிகவும் மோசமானவை. சாதாரண மாரடைப்பில் நோயாளிக்கு இடது தோள் பட்டையில் வலி, நெஞ்சில் வலி, வியர்த்தல் இருக்கும். உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கலாம்.
45 சதவீதம் பேருக்கு சைலண்ட் அட்டாக்: ஆனால் இந்த அமைதியான மாரடைப்பு நோயாளிக்கு எந்த ஒரு அறிகுறியையும் கொடுக்காது. 45 சதவீதம் பேர் இந்த அமைதியான மாரடைப்பால் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களை காட்டிலும் ஆண்களுக்குத்தான் அதிகமாக வருகிறது. இந்த மாரடைப்பு ஏற்பட்டால் அறிகுறிகள் மிகவும் லேசாக இருக்கும். இதனால் இது ஏன் என நோயாளி கண்டுபிடிக்கவே குழப்பங்கள் ஏற்படும். இதனால் மருத்துவ உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
மாரடைப்பின் அறிகுறிகள்: சாதாரணமாக மாரடைப்பின் அறிகுறிகள் - மார்பு பகுதி அழுத்தமாக இருப்பது, நெஞ்சு வலி, மார்பில் யாரோ உட்கார்ந்து அழுத்துவது போல் இருப்பது, தோள்பட்டை, கழுத்து, தசை பகுதிகளில் ஊசி குத்துவது போல் வலி, மூச்சுவிட சிரமப்படுதல் ஆகியவை ஆகும். இதை வைத்து நோயாளியை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம். ஆனால் இவை எல்லாம் சைலண்ட் மாரடைப்பில் இருக்காது.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வறிக்கையில் 45 முதல் 84 வயதுக்குள்பட்ட 2000 பேருக்கு இதய நோய் இல்லை. ஆனால் 10- ஆண்டுகள் கழித்து அவர்களுள் 80 சதவீதம் பேருக்கு சைலண்ட் ஹார்ட்அட்டாக் ஏற்பட்டிருந்தது நிரூபணமானது. அந்த 80 சதவீதம் பேருக்கு நோய் குறித்த எந்த அறிகுறியும் இலலாமல் இருந்தது. இந்த மையோ கார்டியல் எனப்படும் சைலண்ட் மாரடைப்பு என்பது பெண்களை காட்டிலும் 5 மடங்கு ஆண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது என அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
யாருக்கு வரும்: புகைப்பிடித்தல், உடல் பருமன், உடல் உழைப்பின்மை, அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டோருக்கு இதய நோய் வருவதற்கான சாத்தியங்களை போல் சைலண்ட் ஹார்ட் அட்டாக வரவும் வாய்ப்புகள் உள்ளன. நீண்டகாலமாக உறுப்புகளை பாதித்துவரை இந்த சைலண்ட் ஹார்ட் அட்டாக் குறித்து எந்த வித அறிகுறியும் தெரியாது. எனவே மேற்கண்ட நோய்கள் இருப்போர் அவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் பருமனை குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் விளையாட்டு வீரரான சுப்பிரமணி உடற்பயிற்சி, விளையாட்டு என இருந்த நிலையில் அவருக்கு இதயம் அதிகபடியான பம்பிங் ஆனதால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications
